மேட்டூர் அணை நீர் மட்டம் கிடு கிடுவென உயர்வு.! ஒரே நாளில் இத்தனை அடி உயர்வா.?
காவிரி ஆறு தமிழக மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. கர்நாடகாவில் உருவாகும் காவிரி, பல மாவட்டங்களைக் கடந்து தமிழகத்தில் மேட்டூர் அணையை அடைகிறது. கர்நாடகாவின் நீர் திறப்பை நம்பியிருக்கும் தமிழக விவசாயிகள், மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.
CAUVERY
காவிரி ஆறு- மேட்டூர் அணை
தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதி காவிரி ஆறாகும், காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் என்ற பகுதியில் உருவாகிறது. குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு என பல மாவட்டங்களை கடந்து தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வழியாக சேலம் மேட்டூர் அணையை வந்தடைகிறது.
அங்கிருந்து திறக்கப்படும் நீர் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை செழிப்படைய செய்து கடைசியாக வங்கக் கடலில் கலக்கிறது. கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பும். விவசாயிகளின் வாழ்வும் உயரும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய நீரை தராமல் கர்நாடகா அரசு பிடிவாதம் பிடிக்கும்.
Mettur Dam
கர்நாடகாவின் பிடிவாதமும்- காவிரியில் வெள்ளமும்
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 177.25 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா விடுவிக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு குறைந்த அளவு தண்ணீரை மட்டுமே வழங்கியது. இதன் காரணமாக ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் மேட்டூர் அணையில் 35 அடி நீர் இருப்பு மட்டுமே இருந்ததால் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து விவசாயத்தை நம்பி இருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அடுத்த ஒரு சில வாரங்களிலையே கர்நாடகாவில் பருவ மழை வெளுத்து வாங்கியது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகள் முழுவதுமாக நிரம்பியது. இதனால் வெறு வழியின்று தமிழகத்தில் 1.50 லட்சம் கன அடியில் இருந்து 2 லட்சம் வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
METTUR
ஒரே வாரத்தில் உயர்ந்த நீர் மட்டம்
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. 10 நாட்களுக்குள் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்து வந்தது. கர்நாடகாவில் மழை குறைந்ததால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே மீண்டும் கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட மழையின் காரணமாக மீண்டும் தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்தது.
KRS
அதிகரித்த நீர் வரத்து
இதனிடையே மேட்டூர் அணை மீண்டும் இன்று காலை 100 அடியை எட்டியுள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை 72ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.56 அடியில் இருந்து தற்போது 100.01 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து 17,586 கனஅடியில் இருந்து 29,850 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக 7ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வரும் நாட்களில் நீரின் வரத்தை பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.