குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 5786 காளை உரிமையாளர்களும் 1698 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் முன்பதிவு செய்துள்ளனர். போட்டியை தொடங்கி வைக்க துணை முதல்வர் உதயநிதி வருகிறார்.
jallikattu
தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது. இதனை காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பொதுமக்கள் வருகை தருவது வழக்கம்.
Alanganallur jallikattu
இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5,786 காளை உரிமையாளர்களும் 1698 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் முன்பதிவு செய்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க துணை முதல்வர் உதயநிதி வருகிறார். அவர் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை அமர்ந்து போட்டிகளை ரசிக்கவும், ஒவ்வொரு சுற்றிலும் பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும், காளையை அடக்கும் வீரருக்கும் மோதிரம், தங்க நாணயம் போன்ற பரிசுகளை வழங்குகிறார்.
Udhayanidhi
மாலையில் நடக்கும் பரிசளிப்பு விழாவில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கும், பிடிபடாத சிறந்த காளைக்கும் கார்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TASMAC
இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் பகுதியில் நாளை ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (FL-1) மற்றும் மனமகிழ் மன்றங்களை (FL-2) நாளை ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினத்தில் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.
TASMAC Shop
அரசு மதுபானக்கடை எண் - 5416 க.எண்.3/321, பிளாட் எண்.29, எம்.பி.மகால், கோவில் பாப்பாகுடி ரோடு, சிக்கந்தர் சாவடி, மதுரை , 5459 க.எண்.4/278, பாலமேடு மெயின் ரோடு, பொதும்பு, சிக்கந்தர் சாவடி, மதுரை. , ரெட் மௌண்ட் ஸ்போர்ஸ் அண்டு மனமகிழ்மன்றம் 3/377, அலங்காநல்லூர் மெயின் ரோடு, சிக்கந்தர் சாவடி, மதுரை., பிரின்ஸ் ஸ்போர்ஸ் அண்டு மனமகிழ்மன்றம், எண். 53/1, விசுவாசகர் நகர், பாசிங்கா புரம், பொதும்பு, மதுரை ஆகிய கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.