- Home
- Tamil Nadu News
- Courtallam : குற்றாலம் சீசனில் கூட்டம் இல்லாம ஜம்முனு குளிக்கணுமா? இந்த 3 சூப்பர் ஸ்பாட்டுக்கு போங்க...!
Courtallam : குற்றாலம் சீசனில் கூட்டம் இல்லாம ஜம்முனு குளிக்கணுமா? இந்த 3 சூப்பர் ஸ்பாட்டுக்கு போங்க...!
Hidden Tourist Spots near Courtallam : தென் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக இருக்கும் குற்றாலத்தில் சீசன் தொடங்கினால் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் குற்றாலம் அருகில் உள்ள இந்த 3 டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போங்க.

Must Visit Places Near Courtallam
தென்காசி மாவட்டத்தின் முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக விளங்கும் குற்றாலம், இயற்கை அருவிகளாலும் குளிர்ச்சியான சூழலாலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்த குற்றாலத்தில், ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, மெயின் அருவி உள்ளிட்ட புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளுக்காக அறியப்படுகிறது.
குறிப்பாக விடுமுறை நாட்களில் குறைந்த செலவில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று புத்துணர்ச்சி பெற விரும்புவோரின் முதல் தேர்வாக குற்றாலம் இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான பயணிகள் குற்றாலத்தின் முக்கிய அருவிகளை மட்டுமே அறிந்திருப்பார்கள். உண்மையில், குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயற்கை அழகு நிறைந்த பல அருமையான சுற்றுலா தலங்கள் உள்ளன.
குண்டாறு அணை
குற்றாலத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குண்டாறு அணை, இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான இடமாக திகழ்கிறது. 1983-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை, பல திரைப்படங்களின் படப்பிடிப்பு தளமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அணையை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் பல சிறிய அருவிகள் காணப்படுகின்றன. இந்த இடங்களுக்கு நேரடியாக சொந்த வாகனங்களில் செல்ல முடியாது. மலை அடிவாரம் வரை சென்ற பின்னர் அங்கிருந்து ஜீப் வசதி மூலம் பயணிக்க வேண்டும். கூட்ட நெரிசல் குறைவாக இருப்பதால், இயற்கையை ரசித்தபடி நீண்ட நேரம் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடமாக இது உள்ளது.
மேலும், குண்டாறு அணையில் படகு சவாரி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அணை நிரம்பி வழியும் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.
அடவி நயினார் அணை
குற்றாலத்திலிருந்து சுமார் 40 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ள அடவி நயினார் அணை, இயற்கையை நேசிப்பவர்களின் விருப்பமான இடங்களில் ஒன்றாகும். கேரள எல்லையை ஒட்டியுள்ள இந்த அணைக்கு செல்லும் சாலை முழுவதும் பசுமை சூழ்ந்த காட்சிகள் கண்களை கவரும்.
மேக்கரை அருகே அனுமன் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ‘தர்மதுரை’, ‘அந்நியன்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களின் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
குற்றால சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். அணையின் மேற்பகுதியில் அருவி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.
கும்பாவுருட்டி அருவி
குற்றாலம் - அச்சன்கோவில் சாலையில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவி, சாகச பயணத்தை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாகும். தமிழக எல்லையை ஒட்டிய கேரள வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த அருவி, கேரள வனத்துறையின் பராமரிப்பில் உள்ளது.
இங்கு நுழைய ஒருவருக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சோதனைச் சாவடியில் பயணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது.
அருவியை அடையும் பாதையில் சிறிய நீரோடைகள், வளைந்து நெளியும் மலைச்சாலைகள் மற்றும் இயற்கை காட்சிகள் பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றுகின்றன. குற்றாலத்திலிருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடம், அமைதியான சூழலில் இயற்கையை அனுபவிக்க விரும்புவோருக்கு ஏற்ற சுற்றுலா தலமாக உள்ளது.
குற்றாலத்திற்கு வருபவர்கள், முக்கிய அருவிகளை மட்டுமல்லாமல் இந்த மறைந்திருக்கும் இயற்கை பொக்கிஷங்களையும் தங்கள் பயணத் திட்டத்தில் சேர்த்தால், சுற்றுலா அனுபவம் இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

