- Home
- Tamil Nadu News
- அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் தமிழ் இன துரோகிகள்.! இறங்கி அடிக்கும் திமுக கூட்டணி கட்சி
அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் தமிழ் இன துரோகிகள்.! இறங்கி அடிக்கும் திமுக கூட்டணி கட்சி
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்தின் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இதை எதிர்க்க தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக புறக்கணித்துள்ளது. இதுகுறித்து கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு சார்பாக தொகுதி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 31ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாக தென் மாநிலங்கள் அதிகாரத்தை இழக்க நேரிடும். எனவே தமிழக அரசு சார்பாக அனைத்து கட்சி கூட்டம் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தை பாஜக புறக்கணித்துள்ளது. இந்த நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியானகொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மார்ச் 5 அனைத்து கட்சி கூட்டம்
மார்ச் 5ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டியிருக்கின்ற அனைத்துக் கட்சி கூட்டம் தமிழ்நாட்டின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற கூட்டம். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள மாற்று கருத்து உடையவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல தயாராகி வருகிறார்கள்.
அரசியல் ரீதியாக எதிரணிக்கு தலைமை தாங்குபவர்களும் அந்த அணியில் இருக்கும் மற்றவர்களும் கூட்டத்திற்கு வருவதை உறுதி செய்திருக்கிறார்கள். சென்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள் கூட இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கலந்து கொள்ள இசைவு தெரிவித்திருக்கிறார்கள். நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தேவைதான் என்றாலும் மக்கள் தொகை அடிப்படையிலே இருக்க கூடாது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம்
50 ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் தொகை அடிப்படையிலே தொகுதிகள் உருவாக்கப்பட்டு இருந்தாலும் அதற்குப் பிறகு இந்திய மக்கள் தொகையை குறைப்பதற்காக குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டுமென்று அப்போதைய மத்திய அரசு மாநில அரசுகளை நிர்ப்பந்தப்படுத்தியது. தென் மாநிலங்கள் நாட்டினுடைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்கள் தொகையை குறைத்தன.
தென் மாநிலங்களின் தீவிர செயல்பாடுகள் தான் இந்த அளவிற்க்கு இந்தியாவினுடைய மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவியிருக்கிறது.
ஓரணியில் திரண்டு உரிமைக்குரல்
வடமாநிலங்களை போல கட்டுப்பாடு இல்லாமல் மக்கள் தொகையை பெருக்கியிருந்தால் இந்தியாவினுடைய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கும். உலக நாடுகளோடு போட்டி போட்டுக்கொண்டு பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறியிருக்கின்றது என்று மாறு தட்டிக் கொள்கிறோம் என்றால் அதற்கு தென் மாநிலங்களுடைய வளர்ச்சி தான் காரணம். அதற்கு தண்டனையாக நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதிகளை குறைக்க முயற்சிப்பது ஒன்றிய அரசு மீது இருக்கின்ற நம்பிக்கையை சிதைப்பதாகும்.
இப்படிப்பட்ட இந்த சூழலில் ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளை தடுத்து நிறுத்த தமிழகத்தினுடைய அனைத்து அரசியல் கட்சிகளும், மொத்த தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு உரிமைக்குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் இனத்திற்கு துரோகம்
இதில் கூட அரசியல் செய்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்பவர்களை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். பிறந்த சொந்த மண்ணுக்கும், தமிழ் இனத்திற்கும் துரோகம் செய்வதாகவே பார்ப்பார்கள். இதைப் புரிந்து கொண்டு கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்பவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு முறையை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அறிவித்தவுடன் பதறி போனவர்கள் இப்போது கலந்து கொள்வதை தவிர்க்க முடிவு செய்திருப்பதற்கு தகுந்த தண்டனையை உரிய காலத்தில் பெறுவார்கள். அதற்காக தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.