- Home
- Tamil Nadu News
- 14 நாட்களாக போலீசுக்கே டிமிக்கி கொடுத்த கொடூரன் சிக்கியது எப்படி.? வெளியான பரபரப்பு தகவல்
14 நாட்களாக போலீசுக்கே டிமிக்கி கொடுத்த கொடூரன் சிக்கியது எப்படி.? வெளியான பரபரப்பு தகவல்
கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு குற்றவாளியை கைது செய்தனர். குற்றவாளி சிக்கியது எப்படி .?

கும்மிடிப்பூண்டி ஆ,ம்பாக்கம் பகுதியில் 10 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது வட மாநில நபரால் கடத்தப்பட்டு, மாந்தோப்பில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், பின்னர் சோழவரம் அருகே தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கொடூர குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். குற்றவாளியின் புகைப்படமும் போலீசாரால் வெளியிடப்பட்டது. இந்த குற்றவாளியை கைது செய்ய போலீசார் பல இடங்களில் புகைப்படங்களையும் ஒட்டினர். குற்றவாளி தொடர்பாக தகவல் தெரிவித்தால் 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பல மொழிகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
திருவள்ளூர் எஸ் பி விவேகானந்த சுக்லா தலைமையில் 5 டிஎஸ்பிக்கள் 10 ஆய்வாளர்கள் 20 உதவி ஆய்வாளர்கள் 100 காவலர்கள் கொண்ட 20 தனி படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் இந்த நிலையில் நேற்று மாலை ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வட மாநில நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அந்த நபரை ஆரம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முதலில் மேற்கு வங்கம் எனவும் பின்னர் அஸ்ஸாம் எனவும் மாறி மாறி பதில் அளித்துள்ளார். காவல்துறையின் கேள்விக்கு சரிவர பதில் சொல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்துள்ளார். மேலும் மது போதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நபர் இந்தியில் பேசுவதால் இந்தி தெரிந்த போலீசார் மூலம் தொடரந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த குற்றவாளி கைது செய்யப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளியை பிடிக்க போலீசார் பல்வேறு வகைகளிலும் முயற்சி செய்துள்ளனர். பல இடங்களில் போலீசாரின் தொலைபேசி எண்களையும் வெளியிட்டு தகவல் தெரிவிக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து ஏராளமானவர்கள் தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளனர். போலீசாரும் பலரையும் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் தான் சூலூர்பேட்டை பகுதியில் உள்ள தாபாவில் புகைப்படத்தில் உள்ள உருவ ஒற்றுமை கொண்ட நபர் பணியாற்றுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அரக்கோணம், செங்கல்பட்டு டிஎஸ்பி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சூலூர் பேட்டை பகுதியில் உள்ள மதுபானக்கடையில் வடமாநில நபர் அடிக்கடி வந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மது அருந்திய பிறகு ரயில் மூலம் பணிபுரியம் ஊருக்கு சென்றதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது அந்த நபர் மது போதையில் சூலூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கிருந்து தான் புரியும் தாபா ஓட்டலுக்கு செல்ல முயன்ற போது தான் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தாபா கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரிடமும் குற்றவாளி தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.