- Home
- Tamil Nadu News
- முதல்வர் விஜய் உத்தரவு போட்டும்! இன்னும் மூடப்படாத டாஸ்மாக் கடைகள்! இதுவரை மூடப்பட்ட மதுக்கடைகள் எத்தனை?
முதல்வர் விஜய் உத்தரவு போட்டும்! இன்னும் மூடப்படாத டாஸ்மாக் கடைகள்! இதுவரை மூடப்பட்ட மதுக்கடைகள் எத்தனை?
TASMAC Shops: தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இன்று முழுமையாக மூடப்படவில்லை.

மொத்தம் 717 கடைகள் மூடல்
தமிழக முதல்வராக விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பதவியேற்ற இரண்டாவது நாளே அதாவது மே 12ம் தேதி முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதாவது பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை உடனே மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்னும் மூடப்படாத டாஸ்மாக் கடைகள்
அதாவது அந்த கடைகளை இரண்டு வாரத்திற்குள் முழுமையாக மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரிகளுக்குக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று வரை முதற்கட்டமாக 513 மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் மூடப்பட வேண்டிய 204 டாஸ்மாக் கடைகளை இந்த வாரத்திற்குள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சில குளறுபடிகள் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் நிர்வாகம் தீவிர ஆலோசனை
அவசர அவசரமாகக் கடைகளை மூட உத்தரவிட்டதால், இருப்பு சரக்குகளை கையாள்வதிலும், கணக்கு வழக்குகளை முடிப்பதிலும் சிக்கல் நிலவி வருகிறது. மேலும் மூடப்படும் கடைகளில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் மாற்று பணி ஒதுக்கீடு குறித்து முறையான வழிகாட்டுதல்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மூடப்பட்ட கடைகளின் பணியாளர்களைப் பிற கடைகளுக்கு இடமாற்றம் செய்வது மற்றும் காலிப் பணியிடங்களை முறைப்படுத்துவது குறித்தும், எழுந்துள்ள குளறுபடிகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் டாஸ்மாக் நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இரவு 10 மணிக்குள் டாஸ்மாக் மூட உத்தரவு
ஏற்கனவே முதல்வர் விஜய் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது. அப்படி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும் சட்டவிரோதமாக மது விற்கும் நபர்களை கண்காணிக்க போலீசார் மஃப்டியில் ரோந்து செல்ல வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் பார் மூடப்பட்டதை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

