- Home
- Tamil Nadu News
- காத்திருக்கும் 7300 கவுரவ விரிவுரையாளர்கள்.! குட் நியூஸ் வருமா.? கேள்வி எழுப்பும் ஓபிஎஸ்
காத்திருக்கும் 7300 கவுரவ விரிவுரையாளர்கள்.! குட் நியூஸ் வருமா.? கேள்வி எழுப்பும் ஓபிஎஸ்
தமிழ்நாட்டில் 7,300-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள், 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காத்திருக்கும் 7300 கவுரவ விரிவுரையாளர்கள்.! குட் நியூஸ் வருமா.?
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உயர் கல்வியை போதிக்கும்பணியினை கடந்த 20 ஆண்டு காலமாக கௌரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாமல் பல ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 171 அரசு கல்லூரிகளில் 7,300-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
குறைவான மாத சம்பளம்
மாதம் 25,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. அதாவது, ஓர் ஆண்டிற்கு 11 மாத சம்பளம் மட்டுமே பெற்று வருகின்றனர். கௌரவ விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் மாத ஊதியம் தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டிருந்தது.
இந்த ஊதியத்தினைத் தர சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. இருந்தாலும் இதுநாள் வரை இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் ஊதியம்
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் ஊதியம் தருவதற்குப் பதிலாக கூடுதல் பணியை அளித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை செயல்படுத்த வேண்டும், தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த ஒரு வார காலமாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
இவர்களை அழைத்துப் பேசாமல், அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானச் செயல் என குற்றம்சாட்டியுள்ளார். எனவே முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, அவர்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு,
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேசி, பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ஊதியத்தை சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புப்படி நடைமுறைப்படுத்தவும், படிப்படியாக அவர்களை நிரந்தரம் செய்யவும், போராட்டக் காலத்தை பணிக் காலமாக கருதி அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.