- Home
- Tamil Nadu News
- School Holiday: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
School Holiday: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்தும் பல இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகியுள்ளது. மறுபுறம், நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடாமல் சுட்டெரிக்கும் வெயில்
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்தும் வெயில் விடாமல் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதாவது ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 105 டிகிரியும், நாகை - 104, கடலூா் - 102.94, மதுரை விமான நிலையம், புதுச்சேரி தலா - 102.02, பரங்கிப்பேட்டை - 101.84, சென்னை விமான நிலையம் - 101.66, சென்னை நுங்கம்பாக்கம் - 101.48, மதுரை நகரம் - 100.76, திருச்சி, திருத்தணி தலா - 100.58 டிகிரி வெப்பம் பதிவானது. வெயிலுக்கு பயந்து பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர்.
நீலகிரியில் கனமழை
இந்நிலையில் அவ்வப்போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் இன்று வரை விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களுக்கு உள்பட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதனால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணிரு தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது
நேற்று முன் தினம் காலை காற்றுடன் மழை பெய்ததால் ஊட்டி படகு இல்லத்தில் பெடல், துடுப்பு படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

