சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை! பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
Cyclone Fengal
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாமல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் குளம் போல் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
CM Stalin
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
புயல் காற்று மற்றும் கனமழை எச்சரிக்கை வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இன்று காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
Tamilnadu Heavy Rain
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடனும் தமிழ்நாடு முதலமைச்சர் மழை விபரம், முகாம்கள் விபரம், தண்ணீர் வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து தக்க அறிவுரைகள் வழங்கினார்.
Relief Camp
நிவாரண முகாம்
புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் நபர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.
Medical service
மருத்துவ சேவை
மழைக் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மருத்துவ முகாம்களை நடத்தவும், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
Amma Unavagam
தற்போதைய நிவாரணப் பணிகள்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள நிவாரண மைய கட்டடங்கள் அனைத்து வசதிகளுடன் தயாராக உள்ளன. தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
TN Rain Alert
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கடற்கரை பகுதிகளுக்கு புயலை வேடிக்கை பார்க்க எக்காரணத்தை கொண்டும் செல்லக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.