கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடுமோ என்ற பயமா? திமுகவை விளாசும் தமிழிசை!
ஐஐடி இயக்குநர் கோமியம் குடித்த அனுபவத்தையும், அதன் மருத்துவ குணங்களையும் பகிர்ந்ததற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்தது. இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கோமியத்தின் மருத்துவ பயன்களை ஆதரித்துப் பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) இயக்குநர் காமகோடி இரண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தபோது ஒரு சன்னியாசி கூறியதாக கோமியத்தைக் குடித்ததால், 15 நிமிடங்களில் காய்ச்சல் சரியானதாக தெரிவித்தார். கோமியம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு கொண்டது. வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு கோமியம் மருந்தாகப் பயன்படுகிறது என கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சு கடும் விமர்சினத்திற்கு உள்ளானது. இந்த கருத்துக்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
tamilisai
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய ரயில்வே துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற குப்பன் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழாவிற்கு பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சிப் பூர்வமாக மாட்டின் சிறுநீரான கோமியம், அமிர்த நீர் என்று எழுதப்பட்டுள்ளது. மாட்டின் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என்று கூறியுள்ளனர். இது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
tamilisai
சங்க இலக்கியத்தில் கூட மாட்டுச்சாணம் பூசப்பட்ட முற்றங்களை நாம் பார்த்துள்ளோம். அதாவது மார்கழியில் மாட்டு சாணத்தில்தான் பூசணி பூவை வைத்து அலங்கரிக்கிறோம். ஆப்பிரிக்கா, மியான்மர் போன்ற நாடுகளில் மாட்டின் கோமியத்தை பயன்படுத்துகிறார்கள். இதனை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியாது. கோமியம் 80 வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாவும், தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை கல்லூரியை வழிநடத்துபவர் சும்மா கூறுவாரா? என கேள்வி எழுப்பினார்.
cow urine
வேங்கை வயலில் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்தால் அது உங்களுக்கு குற்றமில்லை. ஆனால் மாட்டின் கோமியம் குறித்துச் சொன்னால் நீங்கள் குதிக்கிறீர்கள். இவர்களுக்கு கோமியம் குடிப்பது பிரச்னையில்லை. கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். டாஸ்மாக்கை விட கோமியம் கெடுதல் இல்லை. மாட்டுக்கறியை சாப்பிடுவார்கள். மாட்டு சாணத்தை பயன்படுத்துவார்கள், மாட்டின் கோமியம் மருந்து என்று சொன்னால் எதிர்க்கிறார்கள் என தமிழிசை காட்டமாக கூறியுள்ளார்.