ஆம்ஸ்ட்ராங் கொலையில் முதல் குற்றவாளி இவரா.? போலீசாரின் குற்றப்பத்திரிக்கையில் வெளியான ஷாக் தகவல்!!
சென்னையில் பிரபல அரசியல் பிரமுகர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்கிராப் பிசினஸ் மற்றும் கட்டப்பஞ்சாயத்து தொடர்பான பிரச்சனைகளே கொலைக்கான காரணம் என கூறப்படுகிறது. 90 நாட்களுக்குள் 5000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
சென்னையின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், திமுக மற்றும் அதிமுகவிற்கு டப் கொடுக்கும் வகையில் அரசியல் களத்தல் கலக்கியவர், சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று திராவிட கட்சிகளுக்கு ஷாக் கொடுத்தவர், வடசென்னையில் முக்கிய தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரில் உள்ள தனது புது வீட்டின் கட்டுமானத்தை பார்க்க சென்றவரை சுற்றி வளைத்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை தொடர்பாக சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் 11 பேர் சரணடைந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் என்ன.?
அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொல்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அவரது ஆதரவாளர்கள் உறுதியாக தெரிவித்தனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த திருவேங்கடம் என்ற குற்றவாளியை போலீசார் என்கவுண்டர் செய்த நிலையில், சிறையில் இருக்கும் மற்ற நபர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் திரை மறைவில் பல முக்கிய தலைகளும் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிமுக,திமுக, காங்கிரஸ்,பாஜக, தமாக என பல கட்சி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து அஸ்வத்தாமனும் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் தனக்கும் இடையே மோதல் இருந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
Armstrong
என்கவுண்டர் செய்த போலீஸ்
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருந்து அஸ்வத்தாமனின் தந்தையும், பிரபல தாதாவுமான நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர். தற்போது வரை 28 பேர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல ரவுடிகளை போலீசார் தேடி வந்த நிலையில் காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சீசிங் ராஜா ஆகிய இரண்டு பேர் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்னும் சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் அந்த வகையில் தற்போது போலீசார் 5000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்
எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் 750 ஆவணங்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக வேலூர் சிறையில் இருந்து திட்டம் போட்ட பிரபல ரவுடி நாகேந்திரன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 3வது குற்றவாளியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் பெயர் இடம்பெற்றுள்ளது.
முதல் குற்றவாளி யார் தெரியுமா.?
ஸ்கிராப் பிசினஸ், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனையின் காரணமாக சென்னையில் உள்ள பல ரவுடிகள் இணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலையை எப்படி அரங்கேற்றினார்கள்? கைது செய்யப்பட்டுள்ள 28 நபரின் கொலையில் பங்கு என்ன என்ற முழு விவரங்களையும் குற்றப்பத்திரிக்கையில் போலீசார் இணைத்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது..