- Home
- Tamil Nadu News
- உதயநிதி ஸ்டாலினை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த திமுகவினர் - தமிழக அரசியலில் பரபரப்பு
உதயநிதி ஸ்டாலினை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த திமுகவினர் - தமிழக அரசியலில் பரபரப்பு
Udhayanidhi Stalin arrest : முதல்வர் விஜய் குறித்தும், நடிகை த்ரிஷா குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்துள்ளனர்.

Udhayanidhi Stalin arrest
காவிரி நீர் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும், விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரணத் திட்டம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தஞ்சாவூரில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். போராட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜயின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும், அரசியல் ரீதியாக திமுகவை மட்டுமே குறிவைத்து தாக்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். உதயநிதி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சில திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் "த்ரிஷா... த்ரிஷா..." என முழக்கமிட்டனர். இதையடுத்து மேடையில் அமர்ந்திருந்த சில மூத்த நிர்வாகிகள் சிரித்துக் கொண்டிருந்த காட்சி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது. அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த உதயநிதியும் நிர்வாகிகளைக் கண்டிக்காமல் சிரித்தார்.
மேகதாது விவகாரத்தில் விஜயை விமர்சித்த உதயநிதி
மேகதாது அணை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட டெல்லி நோக்கிச் சென்ற தமிழக விவசாயிகள் மகாராஷ்டிராவில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்ட உதயநிதி, அதுகுறித்து தமிழக அரசு போதிய கண்டனத்தை தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி நடைபெறுவதால், அந்த அரசை விமர்சிக்க முதல்வர் முன்வரவில்லை என்றும், விவசாயிகள் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் அமைதியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆட்சிப் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆகியும் முதல்வர் ஒருமுறைகூட பொதுவெளியில் "பாஜக" என்ற பெயரை குறிப்பிடவில்லை என்றும், அதுவே அவரது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் விமர்சித்தார். விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதை விட தனது அரசியல் நிலையை காப்பாற்றுவதில்தான் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆய்வுப் பயணங்கள், ரீல்ஸ் குறித்து சாடல்
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு செல்லப்போவதாக முதல்வர் அறிவித்ததை சுட்டிக்காட்டிய உதயநிதி, அது வெறும் விளம்பர நடவடிக்கையாகவே முடிந்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், "கர்நாடக முதல்வரை சந்திப்பதற்கு முன்பு, தமிழக விவசாயிகளை முதல்வர் சந்தித்தாரா?" என்று கேள்வி எழுப்பிய அவர், அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதை விட ஆய்வுப் பயணங்கள், ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்து விளம்பரம் தேடுவதற்கு பதிலாக, புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உதயநிதி கைது
இந்த பேச்சைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தவெக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், இன்று காலை அவரது வீட்டுக்கு வந்து கைது செய்தனர். அவரை காவல்துறையின் கைது செய்து அழைத்து சென்றபோது திமுகவினர் போலீஸ் வாகனத்தை மறித்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் உதயநிதியை தஞ்சாவூர் அழைத்து செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதியின் கைதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

