- Home
- Tamil Nadu News
- இன்று இத்தனை மாவட்டத்திற்கு கனமழைக்கு டார்கெட்டா.? டெல்டா வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
இன்று இத்தனை மாவட்டத்திற்கு கனமழைக்கு டார்கெட்டா.? டெல்டா வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Delta Weatherman Alert : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைய உள்ளது. இதன் காரணமாக, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அசத்தலாக தொடங்கியுள்ளது. தென் மாவட்டம் முதல் வட மாவட்டம் வரை மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து வரும் நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் மழையானது நீடிக்கவுள்ளது.
அந்த வகையில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு குஷியாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதே போல கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு
இந்த நிலையில் இன்றைய வானிலை நிலவரம் தொடர்பாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இத்தாழி அடுத்த 12 மணி நேரத்தில் வட தமிழ்நாடு கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
இன்றைய வானிலை
வட தமிழ்நாட்டின் வடகோடி பகுதிகளில் மழை மேகங்கள் ஒன்றிணையத் தொடங்கியுள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் (#KCCT) மற்றும் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பதிவாகும். கடலோரத்தின் ஒரிரு இடங்களில் மிக கனமழை பதிவாக கூடும்.
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் வரக்கூடிய 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
காவிரி டெல்டா & தென் மாவட்டங்கள்
தீவிர தாழ்வு பகுதி காவிரி டெல்டா அருகே நிலைகொண்டிருப்பதால் இன்று (22.10.2025) டெல்டா & தென் மாவட்டங்களில் மிககனமழையோ, தொடர் கனமழைக்கோ வாய்ப்பு இல்லை. காவிரி டெல்டா விவசாயிகள் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் இன்று முதல் மேற்கொள்ளலாம். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்:
மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.