- Home
- Tamil Nadu News
- மகளிருக்கு குட் நியூஸ்: நாளை முதல் அமலாகும் 'வெற்றிப் பயணம்'; டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும் செல்லலாமா?
மகளிருக்கு குட் நியூஸ்: நாளை முதல் அமலாகும் 'வெற்றிப் பயணம்'; டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும் செல்லலாமா?
Vettri Payanam: தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் ‘வெற்றிப்பயணம்’ திட்டம், காந்தி ஜெயந்தியான அக்.2-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

மகளிர் கட்டணமில்லா ‘வெற்றிப்பயணம்’ திட்டம் நாளை முதல் அமல்
தமிழ்நாட்டில் பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட ‘வெற்றிப்பயணம்’ திட்டம், மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்.2-ம் தேதி (நாளை) முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்.
சட்டமன்றத்தில் அறிவிப்பு
தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வசிக்கும் மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தங்களது வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது என்ற சமூகநீதி சிந்தனையின் அடிப்படையில், கடந்த ஆக.24-ந்தேதி சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பெண்கள், மாணவிகள் மற்றும் திருநர் அனைவரும் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாப் பேருந்து சேவை விரிவுபடுத்தப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விரிவுபடுத்தப்படும் பேருந்து சேவைகள்
தற்போது 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயங்கும் நகர சாதாரண பேருந்துகள், 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் மட்டுமே மகளிர் கட்டணமின்றிப் பயணித்து வருகின்றனர். அக்.2 முதல் அமலாகும் ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தின் மூலம் பின்வரும் பேருந்துகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படுகிறது.
மாநகர மற்றும் நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ் (Express) பேருந்துகள்,
எல்.எஸ்.எஸ். (LSS) பேருந்துகள்
டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகள்
புறநகர் சாதாரண பேருந்துகள் (Mofussil Ordinary)
40 கி.மீ.-க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் (Ghat Ordinary)
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்
12,692 பேருந்துகள் இயக்கம்: 7 அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் மொத்தம் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில், 12,692 பேருந்துகள் (69 விழுக்காடு) இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
85% நடைகள் (Singles): மொத்தமுள்ள 1,94,649 நடைகளில் 1,65,312 நடைகள் இத்திட்டத்தின்கீழ் இயக்கப்படும்.
பயனாளிகள் எண்ணிக்கை: இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் கட்டணமில்லாப் பயணப் பலனைப் பெறுவார்கள்.
தொழில்நுட்பத் தயாரிப்புகள் & தேர்தல் நடத்தை விதிமுறை விலக்கு
வெற்றிப்பயணப் பேருந்துகளுக்கான மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் (ETM) இணைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதற்கான சோதனை மற்றும் சரிபார்ப்பு பணிகள் கடந்த செப்.25-ம் தேதியும், சோதனை ஓட்டம் 27-ம் தேதியும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்குச் செல்லவும், உழைக்கும் மகளிர் பணியிடங்களை அடையவும், மருத்துவ, அத்தியாவசியத் தேவைகளுக்கு எளிதாகச் சென்று வரவும் வழிவகுக்கும். மதுராந்தகம் & தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) நடைமுறையில் உள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னரே இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சர் விஜய்யின் சமூக ஊடகப் பதிவு
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள சமூக ஊடகச் செய்தியில்,
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தினை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் வகையில், 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப்பயணம் திட்டம் அக்.2 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

