குற்றாலத்திற்கு டூர் போறீங்களா.? 5 நாட்களாக தொடரும் தடை- எப்போது அருவியில் குளிக்க அனுமதிக்கப்படும் தெரியுமா.?
குற்றாலம் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் 5வது நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பி செல்கின்றனர்.
குற்றால அருவியும் வெள்ளபெருக்கும்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் நீடித்த வந்த நிலையில் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளுமையான இடங்களுக்கு சுற்றுலா சென்றனர். அதே நேரத்தில் குற்றால அருவிகளில் குளிக்க நினைத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் இல்லாமல் வெறும் பாறையாகவே காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.
Kutralam
பழைய குற்றாலம்-சிறுவன் பலி
இந்தநிலையில் கோடை மழை காரணமாகவும் தென் மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கியதாலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தென்காசி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழ தொடங்கியது. இந்தநிலையில் பழைய குற்றால அருவியில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேரனான நெல்லையை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.
Courtallam
5 நாட்களாக தொடரும் தடை
அந்த சம்பவத்தின் எதிரொலியாக அன்றைய தினம் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளும் தற்காலிகமாக மூடப்பட்டு மறு அறிவிப்பு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
5-வது நாளாக இன்றும் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தடை தொடருகிறது.
old coutralam
அருவிகளில் குளிக்க் எப்போது அனுமதி.?
சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து அருவிகளில் ஆனந்த குளியல் இட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் குளிக்க தடையானது தொடர்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி கொடுக்கலாமா வேண்டாம என்ற சிக்கல் உருவாகியுள்ளது.
வானிலை தகவல் என்ன.?
இந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் மழை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் அடுத்தக்கட்ட தகவலையடுத்தே குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கும் என கூறப்படுகிறது.