- Home
- Tamil Nadu News
- Government School Student: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி!
Government School Student: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி!
TamilNadu School Student: தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், மாநில மதிப்பீட்டு புலம் திட்டத்தின் கீழ் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜனவரி வரை நான்கு கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும்.

அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில்: தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம், கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரைபயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது கற்றல் திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தேர்வு கால அட்டவணை
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் அக்டோபர் முதல் ஜனவரி வரை 4 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்ட தேர்வு அக்டோபர் 7 முதல் 10-ம் தேதி வரையும், 2-ம் கட்ட தேர்வு அக்டோபர் 22 முதல் 25-ம் தேதி வரையும், 3ம் கட்ட தேர்வு நவம்பர் 26 முதல் 29-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்வு ஜனவரி 28 முதல் 31-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.
வழிகாட்டு நெறிமுறைகள்
தேர்வுக்கான வினாத்தாள் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் (/exam.tnschools.gov.in/) முன்கூட்டியே பதிவேற்றப்படும். இதையடுத்து தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக அந்த வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வினாத்தாள் பதிவிறக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால் 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு தேர்வும் 40 நிமிடங்களில் முடிக்கும் வகையில் 25 கொள்குறி வகை வினாக்களை கொண்டிருக்கும்.
மாணவர்களுக்கு தனித்தனியாக அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்த தாள்களிலேயே மாணவர்களை குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் சார்ந்த தேதியில் நடத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை திருத்திவிட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.