உஷார் மக்களே.. கல்லூரி மாணவியின் ஷூவுக்குள் புகுந்த நல்ல பாம்பு.. படமெடுத்து ஆடியதால் அதிர்ச்சி.!
கல்லூரி மாணவியின் ஷூ வுக்குள் புகுந்த நல்ல பாம்பு லாவகமாக பிடிக்க முயன்ற போது படமெடுத்து ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதும் ஆடை, காலணிகள் மற்றும் ஷூ போட்டுக்கொள்ளும்போது முன்னெச்சரிக்கையாக முதலில் நன்றாக உதறிவிட்டு போட்டுக்கொள்வது நல்லது. ஏனெனில், சில சமயங்களில் விஷப்பூச்சிகள், தேள், பாம்பு போன்றவை அதனுள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, மழைக்காலங்களில் நாம் எப்போதும் இருப்பதைவிடக் கூடுதல் எச்சரிக்கையாகவும் உஷாராகவும் இருக்க வேண்டும்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் வெளியே செல்வதற்காக வீட்டு வாசலில் இருந்த ஷூவை அணிய எடுத்துள்ளார். அப்போது, ஷூவுக்குள் இருந்து உஷ் உஷ் என்று சத்தம் வருவதை பார்த்த போது பாம்பு நெளிவது கண்டு அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டார்.
உடனே வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த தந்தை ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பாம்பை விரட்டுவதற்கு அச்சமடைந்தனர். பின்னர், பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பாம்புபிடி வீரர் செல்வா பாம்பை பிடிக்க முயன்ற போது சீறிய பாம்பு படமெடுத்து ஆடியது. இதில் சுதாரித்துக் கொண்ட பாம்பு பிடி வீரர் லாவகமாக அந்த பாம்பை பிடித்தார். இரண்டு அடி நீளமுடைய அந்த நல்லபாம்பை, பத்திரமாக மீட்டு அருகில் உள்ள காப்புக்காட்டில் கொண்டு சென்று விட்டார். ஷூவுக்குள் பாம்பு இருப்பதை முன்கூட்டியே அறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.