2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 7 பேர் பலி!100 பேர் மருத்துவமனையில் அனுமதி! விபத்து நடந்தது எப்படி?
பண்ருட்டி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் இரண்டு பேருந்துகளின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தின் முன்பக்கத்தின் டயர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.