ரயில் நிலைய பராமரிப்பு; சென்னையில் நாளை முதல் கூடுதல் பேருந்துகள் - எந்த இடங்களுக்கு சிறப்பு பேருந்து தெரியுமா
தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை முதல் 14ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் நாளை முதல் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் செங்கல்பட்டு - தாம்பரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையேயான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தாம்பரம் ரயில் நிலையத்தில் 03 - 08 - 24 முதல் 14 - 08 - 24 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மின்சார ரயில்
இதன் காரணமாக காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் 11.59 மணி வரையும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர பேருந்து
எனவே அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி 03 - 08 - 24 முதல் 14 - 08 - 24 வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 70 பேருந்துகள் கூடுதலாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
மேலும் காவல் துறையின் வேண்டுகோளின்படி தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்
மேலே குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.