சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பு; 'இளம்' வீரர் நீக்கம்; பும்ரா இருக்கிறாரா? முழு லிஸ்ட் இதோ!
Champions Trophy Indian Team Squad: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் யார்? யார்? இடம்பெற்றுள்ளனர். எந்த வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து பார்க்கலாம்.
Champions Trophy 2025
மினி உலகக்கோப்பை
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட்டில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி மற்ற மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து 3 1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி படுதோல்விகள் அடைய முக்கிய காரணம் ரோகித் சர்மா, விராட் கோலியின் படுமோசமான பேட்டிங் தான்.
இதனால் இவர்கள் இருவர் மீதும், அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், 'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும்
Champions Trophy Indian Team Squad
மொத்தம் எத்தனை அணிகள்?
இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடர் தொடங்கும் பிப்ரவரி 19ம் தேதி நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகின்றன. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தனர்.
Indian Team Squad
இந்திய அணி அறிவிப்பு
இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்கிறார். இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முகமது ஷமி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா தொடரின்போது காயம் அடைந்த பும்ரா இடம்பெறுவரா? என சந்தேகம் எழுந்ததது. ஆனால் பும்ரா அணியில் இடம்பிடித்துள்ளார். உடல்தகுதியை பொறுத்து அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.
இந்திய அணி வீரர்கள் விவரம்
தொடர்ந்து இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. இதேபோல் ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ்குமார் ரெட்டியும் இடம்பெறவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகி சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா.