ஒரு தாய்க்கு இதை விட என்ன வேண்டும்! கையில் கோப்பையுடன் வைஷாலி செய்த செயல்! நெகிழ்ச்சி!
ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலி, கோப்பையை தனது தாய் கையில் கொடுத்து அவரை மேடையேற்றினார். வைஷாலிக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலி
உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடந்த ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார். கடைசி சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியன் சீனாவை சேர்ந்த டான் ஜோங்ஜியுடன் டிரா செய்த அவர் மொத்தம் 8 புள்ளிகள் பெற்று அதிக வெற்றி அடிப்படையில் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக தட்டித் தூக்கினார். இது மட்டுமின்றி அடுத்த ஆண்டு நடக்கும் 8 வீராங்கனைகள் விளையாடும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் வைஷாலி தகுதி பெற்றார்.
பிரதமர் மோடி வாழ்த்து
உலக அரங்கில் இந்தியாவையும், தமிழகத்தையும் பெருமைப்படுத்திய வைஷாலிக்கு நாடு முழுவதும் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சாம்பியன் வைஷாலிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ''சிறந்த சாதனை. வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு வாழ்த்துக்கள். அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், ''செஸ் வீராங்கனை வைஷாலி தனது சாதுரியமான மற்றும் சிறப்பான ஆட்டத்தால் #FIDE மகளிர் கிராண்ட் ஸ்விஸ் பட்டத்தை தக்கவைத்து, அதன்மூலம் மதிப்புமிக்க மகளிர் #Candidates போட்டியில் தனக்கான இடத்தையும் உறுதிசெய்துள்ளார். நமது சென்னைப் பெண்ணுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, சென்னை, தமிழ்நாடு மற்றும் உலக அரங்கில் தங்கள் கனவுகள் பிரதிபலிப்பதைக் காணும் எண்ணற்ற இளம் பெண்களுக்கு ஒரு கொண்டாட்டமாகும்'' என்று கூறியுள்ளார்.
வைஷாலியின் சகோதரர் பிரக்ஞானந்தா
உலக அரங்கில் இந்தியாவின் திறமையை பறைசாற்றிய வைஷாலியின் சொந்த ஊர் சென்னை ஆகும். இவரது சகோதரர் செஸ் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆவார். சாம்பியன் வைஷாலி போட்டி முடிந்து கோப்பையை கையில் வாங்கியபோது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் நிகழ்ந்தன. வைஷாலி கோப்பையை பெறும்போது அவரது தாயும், சகோதரர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் உடன் இருந்தனர்.
ஒரு தாய்க்கு இதை விட வேறு என்ன வேண்டும்?
கோப்பையை வாங்கிய வைஷாலி, அதை புன்னகை ததும்ப தனது தாயிடம் கொடுத்து அவரை மேடையேற்றி அழகு பார்த்தார். மேலும் அவர் கோப்பையுடன் தனது தாய் மற்றும் சகோதர் பிரக்ஞானந்தாவுடன் போஸ் கொடுத்தார். இந்த பக்கம் மகள் செஸ் சாம்பியன், அந்த பக்கம் மகன் செஸ் கிராண்ட் மாஸ்டர். இப்படி நாடே போற்றும் பிள்ளைகளை பெற்றெடுத்த ஒரு தாய்க்கு இதை விட வேறு என்ன வேண்டும்? தனது பிள்ளைகளின் வெற்றிகளை கண்டு அவரது மனம் பூரிப்படைந்து போனது அவரது முகத்தில் மலர்ந்த கள்ளங்கபடமில்லா புன்னகையிலேயே தெளிவாக தெரிந்தது.
வைஷாலி அம்மாவால் நெகிழ்ச்சி
வைஷாலி கோப்பையுடன் போஸ் கொடுத்தபோது சரியாக வெளியே தெரியாமல் இருந்த பதக்கத்தை அவரது அம்மா சரி செய்தது அங்கு இருந்த அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சாதாரண குடும்பத்தில் இருந்து கொண்டு தனது இரண்டு பிள்ளைகளுக்கு ஊக்கம் கொடுத்து, கடினமான காலங்களில் அவர்களுடன் துணை நின்று இருவரையும் உலகமே போற்றும் செஸ் சாம்பியனாக்கிய அந்த தாயை பாராட்ட வார்த்தைகளே இல்லை.