- Home
- Sports
- Sports Cricket
- இந்திய அணியின் டாப் ஸ்பின்னர் திடீர் ஓய்வு.. இன்ஸ்டாவில் உருக்கம்.. ரசிகர்கள் ஷாக்!
இந்திய அணியின் டாப் ஸ்பின்னர் திடீர் ஓய்வு.. இன்ஸ்டாவில் உருக்கம்.. ரசிகர்கள் ஷாக்!
Yuzvendra Chahal: இந்திய அணியின் முன்னணி லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நீண்டகாலமாக இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

திடீரென ஓய்வை அறிவித்த இந்தியாவின் டாப் ஸ்பின்னர்
இந்திய அணியின் பிரபல லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனிமேல் ரெட் பால் கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை என இன்று இன்ஸ்டாகிராமில் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் இன்னும் முழுமையாக விலகவில்லை.
நீண்ட காலமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே தனது ஆசை என அவர் கூறியுள்ளார். தற்போது 36 வயதாகும் சாஹல், கடைசியாக 2023-ல் தான் இந்திய அணிக்காக விளையாடினார். அதனால், இனி அவருக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத சாஹல்
இந்திய அணிக்காக 72 ஒருநாள் மற்றும் 80 டி20 போட்டிகளில் சாஹல் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளும், டி20-யில் 96 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 2023 ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிதான் அவர் கடைசியாக ஆடிய சர்வதேச போட்டியாகும். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கலக்கிய சாஹலுக்கு, ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த ஆசை அவருக்கு நிறைவேறாமலேயே போய்விட்டது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தனது கடைசி ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியோடு, ரெட் பால் கிரிக்கெட்டுக்கு அவர் விடைபெற்றுள்ளார்.
ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் சாஹலின் ரெக்கார்டு
2009-ம் ஆண்டு ஹரியானா அணிக்காக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் சாஹல் அறிமுகமானார். இதுவரை 49 போட்டிகளில் விளையாடி 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பவுலிங் சராசரி 32.27 ஆக உள்ளது. 2026 கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக அவர் கடைசியாக விளையாடினார்.
டிவிஷன் 2-வில் 21 விக்கெட்டுகளை அள்ளிய அவரது பவுலிங் சராசரி வெறும் 16.14 தான். குறைந்தது 20 விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களில், சிறந்த சராசரி வைத்திருப்பவர்கள் பட்டியலில் சாஹல் இரண்டாவது இடத்தில் இருந்தார். லார்ட்ஸில் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டிதான் அவரது கடைசி ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியாகும். அந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற நார்தாம்ப்டன்ஷயர் அணி, டிவிஷன் 1-க்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
எமோஷனலாக பேசிய சாஹல்
ஓய்வு முடிவை அறிவித்து இன்ஸ்டாகிராமில் சாஹல் ஒரு எமோஷனலான பதிவை போட்டுள்ளார். அதில், "எனக்கு 10 வயதாக இருக்கும்போது, நான் முதன்முதலில் கையில் பிடித்தது ஒரு ரெட் பாலைத் தான். இந்த விளையாட்டின் மீது நான் இவ்வளவு காதல் கொள்வேன் என்று அப்போது எனக்குத் தெரியாது. டெஸ்ட் தொப்பியை அணிய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. பல வருடங்களாக அந்த கனவோடு தான் இருந்தேன்.
அது நடக்காமல் போயிருக்கலாம். ஆனால், இந்த ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணத்தில் நான் முழு திருப்தியடைகிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார். மேலும், "நான் இன்னும் முடிந்துவிடவில்லை" என்று கூறி, ஒயிட் பால் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

