மானத்தை காக்குமா இந்தியா? வரிசையாக சரிந்த விக்கெட்ஸ் – வெற்றியை நோக்கி நியூசிலாந்து!
India vs New Zealand 2nd Test: இந்திய அணி 359 ரன்கள் இலக்கைத் துரத்துகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடினார். ஆனால், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
Rohit sharma-Virat Kohli
India vs New Zealand 2nd Test: இந்திய அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் இலக்கைத் துரத்தி வெற்றி பெற்றது ஒரு முறை மட்டுமே. 2008 ஆம் ஆண்டில் அந்த வெற்றி இங்கிலாந்துக்கு எதிராக கிடைத்தது. இப்போது நியூசிலாந்துக்கு எதிராக 359 ரன்கள் இலக்கைத் துரத்தி இந்தியா வெற்றி பெறுமா? 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த மறக்கமுடியாத போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் வீரேந்திர சேவாக் அதிரடியாக பேட்டிங் செய்தார்.
சனிக்கிழமை புனேவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதேபோல் பேட்டிங் செய்தார். இந்த இளம் தொடக்க ஆட்டக்காரர் சேவாக் பாணியிலேயே பேட்டிங் செய்தார். டெஸ்ட் போட்டியிலும் அதிரடி பேட்டிங்கையே விரும்புகிறார் யஷஸ்வி. சனிக்கிழமை முதல் அமர்விலேயே அரைசதத்தை நெருங்கினார். இரண்டாவது அமர்வின் தொடக்கத்திலேயே அரைசதம் அடித்தார்.
எனினும் அவர் 77 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதுவரை ஆட்டம் கண்ட நியூசி வீரர்கள் ஜெய்ஸ்வால் விக்கெட்டை எடுத்ததும் துள்ளி குதித்து கொண்டாடி மகிழ்ந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் 30 சிக்ஸர்கள் அடித்த ஒரே ஒரு வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார்.
ரோகித், சுப்மன் தோல்வி
முக்கியமான நேரத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சுப்மன் கில் நன்றாக பேட்டிங் செய்தார். ஆனால் இரண்டாவது அமர்வின் தொடக்கத்திலேயே 31 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யஷஸ்வி-சுப்மன் ஜோடி பெரிய ஸ்கோரை எடுத்திருந்தால் இந்திய அணிக்கு சாதகமாக இருந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. இந்திய அணியின் ஸ்கோர் 100ஐக் கடந்துவிட்டது.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்த போதிலும் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, ரிஷப் பண்ட், சர்ஃபராஸ் கான் ஆகியோர் இருந்தனர். ஆனால், ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமலே ரன் அவுட்டில் வெளியேறினார். விராட் கோலியும் 17 ரன்களில் சரண்டரானார். முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னில் சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார். 2ஆவது இன்னிங்ஸிலேயும் அவரது பந்திலேயே நடையை கட்டினார்.
அதன் பிறகு வந்த சர்ஃபராஸ் கான் 9 ரன்களில் சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக சான்ட்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். பொறுப்புடன் விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் விளையாடி வருகின்றனர்.
தற்போது வரையில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும், 168 ரன்கள் தேவை. ஆனால் நியூசிலாந்து வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. இந்தப் போட்டியில் நியூசிலாந்து மட்டும் வெற்றி பெற்று விட்டால் 12 ஆண்டுகளாக இந்திய அணி தக்க வைத்து வரும் டெஸ்ட் தொடர் வெற்றி சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதுவரையில் இந்தியா தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியிருக்கிறது.