- Home
- Sports
- Sports Cricket
- RCB vs GT Qualifier 1: 254 ரன்கள் குவித்த ஆர்சிபி! புதிய வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி!
RCB vs GT Qualifier 1: 254 ரன்கள் குவித்த ஆர்சிபி! புதிய வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி!
RCB vs GT Qualifier 1: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபயர் 1 போட்டியில் ஆர்சிபி 254 ரன்கள் குவித்தது. ரஜத் படிதார் 33 பந்தில் 93 ரன்கள் விளாசினார். இந்த போட்டியின் மூலம் விராட் கோலி யாரும் நெருங்க முடியாத சாதனையை படைத்தார்.

RCB vs GT Qualifier 1
ஐபிஎல் 2026 தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. நல்ல தொடக்கம் கொடுத்த வெங்கடேஷ் ஐயர் 7 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 19 ரன் எடுத்து ரபாடா பந்தில் கேட்ச் ஆனார்.
இதன்பிறகு வந்த தேவ்தத் படிக்கலும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்து அதிரடியை தொடர்ந்தனர். இருவரின் பார்னர்ஷிப் 50 ரன்களை கடந்த நிலையில், அட்டகாசமாக விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி 25 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் ஜேசன் ஹோல்டர் பந்தில் போல்டானார். அதிரடி தொடக்கம் கொடுத்த படிக்கல்லும் 19 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 30 ரன்கள் அடித்து அதே ஹோல்டர் பந்தில் கேட்ச் ஆனார்.

ரஜத் படிதார் சிக்சர் மழை
இதன் பிறகு கேப்டன் ரஜத் படிதார் சிக்சர் மழை பொழிந்தார். ரஷித்கான், ரபாடா ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டார். தொடர்ந்து குஜராத் அணி பவுலர்களை கதற விடட் அவர் வெறும் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 93 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். முக்கியமான போட்டியில் ஓரளவு சிறப்பாக விளையாடிய விராட் கோலி யாரும் நெருங்க முடியாத மாபெரும் சாதனையை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் (IPL) வரலாற்றிலேயே தொடர்ச்சியாக 4 சீசன்களில் 600-க்கும் அதிகமான ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
விராட் கோலி வரலாற்று சாதனை
இந்த சீசனில் இதுவரை 15 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி, 600 ரன்களை கடந்துள்ளார். அவருடைய பேட்டிங் சராசரி 50.00. இந்த சீசனில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 164.38. இதுதான் ஒரு ஐபிஎல் சீசனில் அவருடைய சிறந்த ஸ்ட்ரைக் ரேட் ஆகும். இதில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் அடங்கும். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 105*.
2022 சீசனில் கோலி சற்று தடுமாறினார். அப்போது 16 போட்டிகளில் வெறும் 341 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருடைய சராசரி 22.73 ஆக இருந்தது. இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆனால், அதன்பிறகு ஐபிஎல்-ல் கோலியின் கம்பேக் அபாரமாக இருந்தது. வயது கூடினாலும், 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், ஒரு டி20 கிரிக்கெட்டராக தன்னை புதுப்பித்துக்கொண்டார். ஒவ்வொரு சீசனிலும் தனது ஆட்டத்தின் வெவ்வேறு அம்சங்களை மெருகேற்றினார்.
ஒவ்வொரு சீசனில் விராட் கோலி மாஸ்
2023 சீசனில் கம்பேக் கொடுத்த அவர், 14 இன்னிங்ஸ்களில் 639 ரன்கள் குவித்தார். அப்போது அவருடைய சராசரி 53.25, ஸ்ட்ரைக் ரேட் 139.82. இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஆறு அரைசதங்கள் அடங்கும். அந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 101*.
அடுத்த சீசனில், ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக தனது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்திக்கொண்டார். பல வருடங்களுக்குப் பிறகு, அவருடைய மிக மூர்க்கமான சிக்ஸர் அடிப்பதை பார்க்க முடிந்தது. அந்த சீசனில் 15 இன்னிங்ஸ்களில் 741 ரன்கள் அடித்து, ரன் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அவருடைய சராசரி 61.75, ஸ்ட்ரைக் ரேட் 154.69. இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும். அந்த எடிஷனில் மொத்தம் 38 சிக்ஸர்கள் அடித்தார். இது 2016 சீசனில் அவர் அடித்த 38 சிக்ஸர்கள் என்ற சாதனையை சமன் செய்தது.
கடந்த சீசனில், RCB அணி கோப்பையை வென்றதில் கோலி முக்கியப் பங்காற்றினார். வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றிக்கொண்டு, பேட்டிங்கில் அணியை முன்னின்று வழிநடத்தினார். அந்தத் தொடரில் 15 இன்னிங்ஸ்களில் 657 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவருடைய சராசரி 54.75, ஸ்ட்ரைக் ரேட் 144.71. இதில் எட்டு அரைசதங்கள் அடங்கும்.

