IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. அம்பயர்களின் முடிவால் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த அஷ்வின்
ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் 2வது இன்னிங்ஸில் பனி காரணமாக அம்பயர்கள் பழைய பந்தை மாற்றி வேறு பந்து வழங்கிய சம்பவம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அம்பயர்களின் அந்த முடிவு வியப்பளித்ததாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசனில் இம்பேக்ட் பிளேயர், வைடு - நோ பால் முடிவுகளை ரிவியூ செய்வது என பல புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டன. இந்த சீசனில் பல விஷயங்கல் வியப்பளிக்கும் விதமாக நடந்துவருகின்றன. அந்தவகையில், சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் பனி காரணமாக பந்து வழுக்கியதால் வேறு பந்தை அம்பயர்கள் மாற்றி கொடுத்தது வியப்பை ஏற்படுத்தியது.
சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரின் அதிரடி அரைசதம்(52) மற்றும் தேவ்தத் படிக்கல்(38), அஷ்வின் (30), ஹெட்மயர்(30) ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவரில் 175 ரன்கள் அடித்தது. 176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் கடைசியில் சிக்ஸர்களாக விளாசி கடுமையாக போராடிய போதிலும் 20 ஓவரில் 172 ரன்கள் அடித்து 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது. தனது 200வது ஐபிஎல் போட்டியான இந்த போட்டியில் 17 பந்தில் 32 ரன்களை விளாசினார் தோனி.
IPL 2023: முழங்கால் காயத்தால் அவதிப்படும் தோனி..! தென்னாப்பிரிக்க வீரர் 2 வாரம் விலகல்
இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீசிய போது, பனிப்பொழிவு காரணமாக பந்து வழுக்கியதால் அம்பயர்கள் வேறு பந்தை பவுலிங் அணிக்கு வழங்கினர். 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு தாக்கத்தின் அடிப்படையில் தான் டாஸ் ஜெயிக்கும் அணி, பேட்டிங்-பவுலிங் என்பதை முடிவு செய்யும். எனவே பனி என்பது ஆட்டத்தின் ஒரு அங்கமாகவும், வியூகமாகவுமே மாறிவிட்டது. அப்படியிருக்கையில், 2வது இன்னிங்ஸில் பனியின் தாக்கத்தால் பவுலர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் தான் இலக்கை சேஸ் செய்ய அணிகள் விரும்புகின்றன. அப்படியிருக்கையில், அம்பயர்கள் பந்தை மாற்றி வழங்கியது பெரும் வியப்பே. இதற்கு முன் இப்படியான சம்பவம் ஐபிஎல்லில் நடந்ததே இல்லை.
ஆட்டத்திற்கு பின் இதுகுறித்து பேசிய ரவிச்சந்திரன் அஷ்வின், பனியின் தாக்கத்தால் அம்பயர்கள் பந்தை மாற்றியது பெரும் வியப்பாக இருந்தது. இந்த சீசனில் சில முடிவுகள் எனக்கு வியப்பாக இருக்கின்றன. இன்னிங்ஸின் இடையில் பந்தை மாற்றி வழங்கியதில் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அப்படி வழங்கியது நல்லது அல்லது கெட்டது என்பதை கடந்து இரு அணிகளுக்கும் சரியான பேலன்ஸை வழங்கும் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.