#AUSvsIND இதுக்கு மேல காயத்தை இந்திய அணி தாங்காதுடா..! நல்லா போயிட்டு இருந்த போட்டியில் கடும் பின்னடைவு
ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நவ்தீப் சைனி இடுப்பு வலியால் பாதியில் களத்திலிருந்து வெளியேறியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நடப்பு டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு, வீரர்களின் காயம் தொடர் சோகமாக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட்டில் ஷமி, 2வது போட்டியில் உமேஷ் யாதவ், 3வது டெஸ்ட்டில் ஹனுமா விஹாரி, ஜடேஜா, பும்ரா, அஷ்வின் ஆகியோரும் பயிற்சியின்போது கேஎல் ராகுல் என முக்கியமான வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தால் வெளியேறினர்.
எனவே இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ் என இந்திய அணியின் முன்னணி ஐந்து ஃபாஸ்ட் பவுலர்களும் இல்லாமல், நவ்தீப் சைனி, சிராஜ், ஷர்துல் தாகூர், நடராஜன் என, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவமே இல்லாத ஃபாஸ்ட் பவுலர்களுடன் கடைசி டெஸ்ட்டில் களமிறங்கியது இந்திய அணி.
இப்போது அதிலும் ஒரு சிக்கல் வந்துள்ளது. பிரிஸ்பேனில் நடந்துவரும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி., அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்துள்ளது ஆஸி., அணி. இந்த போட்டியில் இன்னிங்ஸின் 36வது ஓவரை வீசியபோது இடுப்பு வலியால் களத்தை விட்டு வெளியேறினார் நவ்தீப் சைனி.
அதன்பின்னர் அவர் முதல் நாள் ஆட்டத்தில் மீண்டும் களத்திற்கு வரவேயில்லை. இடுப்பு வலியால் அவதிப்பட்டுவரும் நவ்தீப் சைனியின் உடல்நிலையை பிசிசிஐ மருத்துவக்குழு உன்னிப்பாக கவனித்துவருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவர் 2ம் நாளான நாளைய ஆட்டத்தில் ஆடுவாரா இல்லையா என்பது தெரியவில்லை.