Ind Vs Pak: டி20 மகளிர் உலகக்கோப்பை: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா - வெளியேற்றத்தில் இருந்து தப்பியது
மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை எதிர் கொண்டது. முதல் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் களம் இறங்கியது.
டாஸ் வென்ற மகிழ்ச்சியில் முதலில் பேட்டிங் செய்து இந்தியா அணிக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு களத்திற்கு வந்த பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து ஷாக் கொடுத்தனர். பாகிஸ்தான் மகளிர் அணி, இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அருந்ததி ரெட்டி 19 ரன்களை விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளும், ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய மகளிர் அணி விக்கெட்டை இழக்கக் கூடாது என்ற நோக்கோடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் அதிரடி காட்டிய இந்தியா 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 24 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். தற்போது வரை டி20 போட்டிகளில் 16 முறை பாகிஸ்தான் அணியை எதிர் கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 13 போட்டிகளில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.