- Home
- Spiritual
- Aadi Perukku 2025: தீர்க்க சுமங்கலி வரம் பெற செய்ய வேண்டிய வழிபாடு மற்றும் தாலி கயிறை மாற்ற நல்ல நேரம்
Aadi Perukku 2025: தீர்க்க சுமங்கலி வரம் பெற செய்ய வேண்டிய வழிபாடு மற்றும் தாலி கயிறை மாற்ற நல்ல நேரம்
ஆடிப்பெருக்கு தினத்தன்று செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் தாலி மாற்றும் நேரம் ஆகியவை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Aadiperukku 2025:
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக விளங்கி வருகிறது. ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பானதாக கருதப்பட்டாலும், 18 ஆம் தேதி வரும் ஆடிப்பெருக்கு நாள் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஆடி 18 ஆம் தேதி செய்யப்படும் வழிபாடு என்பது மிகவும் எளிமையான, அதே சமயம் அனைவராலும் செய்யப்படக்கூடிய ஒரு வழிபாடாகும். இந்த வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்? தாலி மாற்றிக் கொள்வதற்கான நல்ல நேரம் என்ன? என்பது குறித்து பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
18 ஆம் எண்ணுக்கு ஏன் இத்தனை சிறப்புகள்
ஆடி மாதத்தின் 18 ஆம் தேதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. 18 ஆம் எண்ணுக்கு பல சிறப்புகள் உண்டு. தமிழில் உள்ள பதினெண்கீழ்க்கணக்கு, பதிணென்மேற்கணக்கு ஆகிய நூல்களின் எண்ணிக்கை 18, பாரதத்தின் யுத்தம் நடந்த நாட்கள் 18, பாரதத்தின் அத்தியாயம் 18, கீதையின் அத்தியாயங்கள் 18, சபரிமலையில் உள்ள படிகள் 18, சித்தர்கள் 18, கணங்கள் 18, புராணங்கள் 18. இப்படியாக 18 என்ற எண்ணிற்கு பல சிறப்புகள் உள்ளன. ஆடிப்பெருக்கு தினத்தில் தான் பாரதப்போர் நிறைவடைந்தாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
நீரின் மகிமையை அறிந்த தமிழர்கள்
ஆடிப்பெருக்கு என்பது நீர்நிலைகள் பெருகி, விவசாயம் செழிக்க உதவும் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு நாளாகும். காவிரி நதி இருக்கும் இடங்களில் மட்டும் வழிபாடு நடத்த வேண்டும் என்பது கிடையாது. நதிகள் ஓடும் இடங்கள் அனைத்திலும் இந்த வழிபாட்டைச் செய்யலாம். இந்த நாளில் ஆற்றங்கரையில் அல்லது வீட்டிலேயே கலசம் வைத்து காவிரி அன்னையை நினைத்து வழிபடுவது வழக்கம். பஞ்சபூதங்கள் இல்லாமல் இந்த உலகில் வாழ முடியாது. பஞ்சபூதங்களில் முக்கியமானதாக இருப்பது தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவர் தனது குறளில் குறிப்பிட்டுள்ளார். தண்ணீரை நாம் பாதுகாக்க வேண்டும். தெய்வமாக மதித்து வழிபட வேண்டும் என்பதற்காகவே ஆடிப்பெருக்கு தினத்தில் நீர்நிலைகளை வழிபடும் வழக்கத்தை தமிழர்கள் கொண்டுள்ளனர்.
ஆடிப்பெருக்கு வழிபாட்டிற்கு உகந்த நேரம்
இந்த வருடம் ஆடிப்பெருக்கு 03-08-2025 ஆம் தேதி வருகிறது இந்த தினத்தில் காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரையும், 11:00 மணி முதல் 12:00 மணி வரையும் வழிபாட்டை செய்யலாம். 9:45 வரை நவமி இருப்பதால், 11:00 மணி முதல் 12:00 மணி வரை தாலிக்கயிறு மாற்றிக் கொள்வதற்கு உகந்த நேரம் ஆகும். இந்த தினத்தில் எதைச் செய்தாலும் அதை பெருக்கமாக மாறும். இதனால் தான் இதற்கு ஆடிப்பெருக்கு என்று பெயர். இந்த தினத்தில் நாம் எதை தொடங்கினாலும் அது வெற்றி பெற்றதாக மாறும். வெற்றிப் படியை அடைய விரும்புபவர்கள் ஆடி 18 தினத்தில் காரியத்தை தொடங்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. கடை, வியாபரம் ஆரம்பிப்பவர்கள் இந்த தினத்தில் தொடங்கலாம் அல்லது புதிதாக ஏதாவது வாங்க விரும்புபவர்கள் இந்த தினத்தில் வாங்கலாம்.
எப்படி வழிபட வேண்டும்?
காவிரி ஆற்றங்கரையில் வாழை இலையை விரித்து அதன் மீது மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழங்கள், கண்ணாடி வளையல்கள், காதோலை, கருகமணி போன்ற மங்கலப் பொருட்களை வைக்க வேண்டும். பின்னர் அதன் முன் விளக்கேற்றி, தீபம் காண்பித்து, கற்பூரம் ஏற்றி காவேரி அன்னையை வழிபட வேண்டும். வழிபாடு முடித்த பின்னர் வாழை இலையை ஆற்றில் விடுவது ஒரு பாரம்பரிய வழக்கமாகும். ஆற்றங்கரைக்கு சென்று வழிபட முடியாதவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் சிறிது மஞ்சள் மற்றும் பூக்களை போட வேண்டும். இதை காவிரி அன்னையாக நினைத்து பூஜை அறையில் வைத்து மேற்கூறிய முறையில் வழிபட வேண்டும். புதிதாக திருமணமானவர்கள் கணவர் கையால் தாலிக்கயிறு மாற்றிக் கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண்கள், மூத்த சுமங்கலி பெண்கள் கையால் மஞ்சள் கயிறை கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
தீர்க்க சுமங்கலி பலம் தரும் ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் அதிகரிக்க மஞ்சள் கயிறை மாற்றி புதிய கயிறை அணிவார்கள். பொதுவாக ராகு காலம், எமகண்டம் தவிர்த்து நல்ல நேரத்தில் இதை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பதும், திருமணமாகாத பெண்களுக்கு அடுத்த ஆடி மாதத்திற்குள் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.