- Home
- Special
- Euclid Telescope: விஞ்ஞானிகளே மிரண்டுட்டாங்க! 6 கோடி நட்சத்திரங்கள்! மில்கி வேயின் ரகசியத்தை உடைத்த புகைப்படம்!
Euclid Telescope: விஞ்ஞானிகளே மிரண்டுட்டாங்க! 6 கோடி நட்சத்திரங்கள்! மில்கி வேயின் ரகசியத்தை உடைத்த புகைப்படம்!
Euclid Telescope: விண்வெளியை நாம் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அது புதிய ஆச்சரியங்களைத் தருகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக, நமது மில்கி வேயின் ரகசியங்கள் நிறைந்த மையப் பகுதியை யூக்ளிட் டெலஸ்கோப் படம் பிடித்துள்ளது.

பிரம்மாண்டத்தின் உச்சம்: 6 கோடி நட்சத்திரங்கள்!
விண்வெளி எப்போதும் நமக்கு விடைதெரியா விந்தைகளையும், ஆச்சரியங்களையும் வாரி வழங்கும் ஒரு அற்புதம். அந்த வகையில், விண்வெளி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, நமது பால்வெளி அண்டத்தின் (Milky Way) மையப்பகுதியை அதிநவீன ‘யூக்ளிட்’ (Euclid) தொலைநோக்கி அக்குவேறா ஆணிவேறா படம் பிடித்து அசத்தியுள்ளது.
நமது மில்கி வேயின் நடுப்பகுதியை 'கலெக்டிக் பல்ஜ்' (Galactic Bulge) என்று வானியலாளர்கள் அழைப்பார்கள். விண்வெளியின் இந்த அடர்த்தியான மையப்பகுதியைத்தான் யூக்ளிட் டெலஸ்கோப் தற்போது படம் பிடித்துள்ளது. பார்ப்போரைக் கண் இமைக்க வைக்காத இந்தப் பிரம்மாண்டமான ஒரே புகைப்படத்திற்குள், சுமார் 6 கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்களும், எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்களும் (Star Clusters) அடங்கியுள்ளன என்பதுதான் வியப்பின் உச்சம்.
26 மணி நேர விண்வெளித் தவம்
விண்வெளியில் மிகத் தூரத்திலிருக்கும் கண்ணுக்கே தெரியாத நுணுக்கமான ரகசியங்களை ஆராய்வதுதான் இந்த யூக்ளிட் டெலஸ்கோப்பின் வேலை. இதற்காக, மில்கி வேயின் மையத்தை நோக்கி சுமார் 26 மணி நேரம் இந்த டெலஸ்கோப் நிலைநிறுத்தப்பட்டது. அப்படி எடுக்கப்பட்ட 9 வெவ்வேறு துல்லியமான படங்களை ஒன்றாக இணைத்துதான் இந்த ஒற்றை மெகா புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும்போது, 22 முழு நிலவுகள் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்ளுமோ, அவ்வளவு பெரிய விண்வெளிப் பரப்பை இந்த ஒரு படம் நமக்குக் காட்டுகிறது.
புதிய உலகங்களை வேட்டையாடும் 'மைக்ரோலென்சிங்' தொழில்நுட்பம்
மில்கி வேயின் மையப்பகுதியில் நட்சத்திரங்கள் அள்ளிக் தெளித்தது போல மிக நெருக்கமாகக் குவிந்து கிடப்பதால், அங்கு புதிய கிரகங்களைக் கண்டுபிடிப்பது விஞ்ஞானிகளுக்குக் குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால், யூக்ளிட் அனுப்பியிருக்கும் இந்தத் துல்லியமான புகைப்படம், 'மைக்ரோலென்சிங்' (Microlensing) என்ற அதிநவீன தொழில்நுட்பம் மூலம் புதிய கிரகங்களை எளிதாகக் கண்டறிய வழிவகை செய்துள்ளது. ஆச்சரியமாக, விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்த 51 கிரக அமைப்புகளை (Planetary Systems) இந்த புதிய புகைப்படத்தின் மூலமே மீண்டும் அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.
நான்சி கிரேஸ் ரோமன் ஸ்பேஸ் டெலஸ்கோப்
ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) இந்த யூக்ளிட் டெலஸ்கோப் தந்துள்ள தரவுகள், நாசா (NASA) அடுத்ததாக விண்ணில் செலுத்தவிருக்கும் 'நான்சி கிரேஸ் ரோமன் ஸ்பேஸ் டெலஸ்கோப்' (Nancy Grace Roman Space Telescope) திட்டத்திற்குப் புளூபிரின்ட் போல உதவப் போகிறது. ரோமன் டெலஸ்கோப் விண்வெளியின் இருண்ட ஆழத்தில் மறைந்திருக்கும் பனிக்கட்டி கிரகங்களையும், எந்தவொரு தாய் நட்சத்திரத்தின் பிடியிலும் இல்லாமல் விண்வெளியில் அனாதையாகச் சுற்றும் 'ரோக் பிளானட்ஸ்' (Rogue Planets)-களையும் வேட்டையாட உள்ளது. அதற்கு இந்த யூக்ளிட் புகைப்படம் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

