- Home
- Cinema
- கருத்து
- Vadhandhi 2 Review : முதல் சீசனை போல் அடிபொலியாக இருந்ததா வதந்தி 2 வெப் சீரிஸ்? விமர்சனம் இதோ
Vadhandhi 2 Review : முதல் சீசனை போல் அடிபொலியாக இருந்ததா வதந்தி 2 வெப் சீரிஸ்? விமர்சனம் இதோ
Vadhandhi Season 2 Web Series Review : ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிக்குமார், அனகா, விவேக் பிரசன்னா நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் வதந்தி 2 வெப் சீரிஸின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Vadhandhi Season 2 Review
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள 'வதந்தி' சீசன் 2, முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து அதிக எதிர்பார்ப்புகளுடன் வந்துள்ள கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸாகும். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடரில் சசிகுமார், அனகா, விவேக் பிரசன்னா, அபர்ணா தாஸ், யஷ்வந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
வதந்தி 2 கதை
கதைப்படி, எட்டு வழிச்சாலை பணியின் போது கண்டெடுக்கப்படும் மனித எலும்புக்கூடு ஒரு புதிய விசாரணைக்கு வழிவகுக்கிறது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அந்த நபர் யார்? அவரின் மரணத்திற்குப் பின்னால் என்ன மர்மம்? எப்போது புதைக்கப்பட்டது? அதன் பின்னணியில் என்ன சம்பவம் நடந்தது? என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் விசாரணை பொறுப்பு காவல் அதிகாரிகளிடம் வருகிறது. சசிகுமார் தலைமையிலான விசாரணைக்குழு முன்னேறும்போது, எதிர்பாராத திருப்பங்களும் புதிர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுகின்றன. இறுதியில் உண்மை வெளிவருகிறதா? இல்லையா? என்பதே தொடரின் மீதிக்கதை.
வதந்தி 2 விமர்சனம்
இந்த தொடரின் மிகப்பெரிய பலமாக இருப்பது அதன் திரைக்கதையே. ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை சஸ்பென்ஸில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு எபிசோடிலும் புதிய சந்தேகங்களை உருவாக்கும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளி யார் என்பதை இறுதிவரை யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை நகர்வது சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. கிளைமாக்ஸும் நம்பகமான முறையில் முடிவடைவதால், தொடரின் தாக்கம் அதிகரிக்கிறது.
நடிப்பைப் பொறுத்தவரை, சசிகுமார் தனது அனுபவமிக்க நடிப்பால் விசாரணை அதிகாரி கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். அதேபோல் இந்த தொடரின் மற்றொரு ஹைலைட் என்றால் அது யஷ்வந்த் தான், அவரின் நடிப்பு டாப் கிளாஸ் ஆக உள்ளது. அனகா, விவேக் பிரசன்னா, அபர்ணா தாஸ் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
GDN Review : ஜிடி நாயுடுவாக மாதவன் கலக்கினாரா? சொதப்பினாரா? ஜிடிஎன் விமர்சனம் இதோ
வதந்தி 2 ரிவ்யூ
குறிப்பாக இறுதி இரண்டு எபிசோடுகளில் இடம்பெறும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் கதையின் தாக்கத்தை அதிகரிக்கின்றன. விவேக் பிரசன்னாவின் இயல்பான நகைச்சுவை வசனங்களும், சீரியஸான கதையிலும் சிறிய இலகுவான தருணங்களை உருவாக்குகின்றன.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கதையின் மர்ம உணர்வை வலுப்படுத்துகின்றன. குறிப்பாக விசாரணைக் காட்சிகளில் பின்னணி இசை கூடுதல் பதற்றத்தை உருவாக்குகிறது.
இருப்பினும், சில இடங்களில் சசிகுமார் மற்றும் அபர்ணா தாஸ் தொடர்பான காட்சிகள் கதையின் வேகத்தை சற்று குறைப்பதாக தோன்றுகிறது. அவை பிரதான கதைக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடரில் சில பகுதிகளை சுருக்கியிருந்தால், திரைக்கதை இன்னும் வேகமாக இருந்திருக்கும்.
வதந்தி 2 வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
இந்த தொடரில் அதிக அளவில் கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதால், குடும்பத்துடன் பார்க்கும்போது சற்று கவனம் தேவை. இருப்பினும் நிர்வாணக்காட்சிகள் போன்றவை இடம்பெறவில்லை.
மொத்தத்தில், சில சிறிய குறைகள் இருந்தாலும், வலுவான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள், சிறந்த நடிப்பு மற்றும் தரமான தொழில்நுட்ப அம்சங்களால் 'வதந்தி' சீசன் 2, கிரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தராத ஒரு வெப் சீரிஸாக அமைந்துள்ளது. முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனும் தனது தரத்தை பெரும்பாலும் தக்கவைத்திருப்பதால், கிரைம் த்ரில்லர் ரசிகர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு தரமான வெப் சீரிஸாக திகழ்கிறது.

