- Home
- Cinema
- கருத்து
- பிக் பாஸ் பவித்ரா நடித்த ‘ரேகை’ வெப் சீரிஸ்... ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
பிக் பாஸ் பவித்ரா நடித்த ‘ரேகை’ வெப் சீரிஸ்... ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
பிக் பாஸ் பவித்ரா ஜனனி போலீஸ் ஆக நடித்துள்ள ரேகை என்கிற வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Regai Web Series Review
குற்றக் கதைகளின் அதிபதியாக கருதப்படும் எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல்கள் தமிழ் வாசகர்களிடம் எப்போதும் தனிப்பட்ட வரவேற்பைப் பெற்றவை. அவரது கதைகளில் இருக்கும் சஸ்பென்ஸ், வேகம், புதிர் ஆகியவை பல தலைமுறைகளாக வாசகர்களை கவர்ந்தது. அந்த நாவல்களில் ஒன்றின் கருவை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் தினகரன் ஒரு முற்றிலும் புதுமையான வெப் சீரிஸை உருவாக்கியுள்ளார். ஏழு எபிசோடுகளைக் கொண்ட இந்த கிரைம்-திரில்லர் வெப் சீரிஸ் நவம்பர் 28 முதல் Zee5-ல் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்த சீரிஸில் முக்கிய வேடங்களில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரின் விமர்சனத்தை பார்க்கலாம்.
ரேகை கதை என்ன?
சப் இன்ஸ்பெக்டர் பாலஹாசனும், கான்ஸ்டபிள் பவித்ரா ஜனனியும் ஒரு மரணம் குறித்து வழக்கமான விசாரணைக்கு புறப்படுகிறார்கள். ஆனால் முதலில் விபத்தாக தோன்றிய அந்த மரணத்தின் பின்னால் மறைந்திருக்கும் சந்தேகங்கள் அவர்களை ஆழமான புதிர் உலகிற்கே இழுத்துச் செல்கின்றன. ஒரு மரணம், அடுத்து இன்னொரு மரணம்… தொடர் மரணங்கள் அவர்களை ஒரு பெரும் கொலைத் தளத்துக்கு அழைத்துச் செல்கின்றன. இந்த வழக்கில் ஐந்து பேருக்கும் என்ன தொடர்பு? ஏன் அவர்கள் குறியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? உண்மையில் கொலைக்காரன் யார்? இந்தக் கேள்விகளின் விடையை திரில்லர் ரீதியில் சுவாரஸ்யமாக சொல்லுவதுதான் இந்த ரேகை.
ரேகை வெப் சீரிஸ் விமர்சனம்
பாலஹாசன்,போலீஸ் அதிகாரியாக வெகுவாக செட்டாகியுள்ளார். விசாரணை, ஆக்ஷன், இளம் கோபம் எல்லாம் அவருடைய நடிப்பில் இயல்பாக தெரிகிறது. பவித்ரா ஜனனி, பிக் பாஸ் பிறகு வந்த முக்கிய தொடர் இது. கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அவரின் நடிப்பு பல காட்சிகளில் கைதட்ட வைக்கிறது. வினோதினி வைத்தியநாதன், இதுவரை இல்லாத ஒரு புதிய வேடத்தில் தன்னைக் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார். அஞ்சலி ராவ், மிக முக்கியமான நெகட்டிவ் வேடத்தில் கவனம் ஈர்த்துள்ளார். இதர கதாபாத்திரங்களாக போபலன் பிரகதேஷ், ஸ்ரீராம், இந்திரஜித் ஆகியோரும் தங்கள் பங்களிப்புகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.
ரேகை வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
இசையமைப்பாளர் ராஜ் பிரதாப் திரில்லரின் டென்ஷனை உயர்த்தும் வகையில் பின்னணி இசையை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் மகேந்திரா ஹென்றி தென்காசியின் சுருங்கிய தெருக்கள், மருத்துவமனை சூழல், போலீஸ் ஸ்டேஷன் அனைத்தையும் நிஜத்தன்மையுடன் கொண்டு வந்துள்ளார். துரை படத்தொகுப்பு, தேவையற்ற நீளமின்றி ஏழு எபிசோடுகளிலும் கதையை சீராக கொண்டு செல்ல உதவி இருக்கிறார்.
ரேகை வெப் சீரிஸ் ரிவ்யூ
ராஜேஷ்குமார் எழுதிய குற்றக் கதையிலிருந்து ஒரு கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, அதனை முழுமையாக தனது ஸ்டைலில் வெப் சீரிஸாக வடிவமைத்த இயக்குநர் தினகரனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இந்த சீரிஸில் திரில்லர் மட்டுமல்லாமல், சாதாரண மனிதர்கள் எப்படிப் பெரிய அதிகார விளையாட்டுகளில் பலியாகிறார்கள் என்பதையும் உணர்த்தும் சமூகவிழிப்புணர்வு உள்ளது. ஒவ்வொரு எபிசோடும் முடிவில் எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டே செல்லும் வகையில் நன்றாக அமைந்திருப்பது சிறப்பு.
‘ரேகை’ இந்த இயக்குநருக்கான ஒரு வலுவான மார்க் மட்டுமல்ல, எதிர்காலத்தில் மேலும் பல அருமையான வெப் சீரிஸ்கள், படங்கள் வரப்போகின்றன என்பதற்கான சிக்னலும் ஆகும். இந்த தொடர் நிச்சயமாக ராஜேஷ்குமார் நாவல்களை மீண்டும் திரையுலகுக்கு கொண்டுவரும் ஒரு வழிவகை. Zee5-ல் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கத் தகுந்த ஒரு நல்ல கிரைம்-திரில்லர்!

