மதறாஸ் மாஃபியா கம்பெனி விமர்சனம்... ஆனந்தராஜின் காமெடி விருந்து டேஸ்டா? வேஸ்டா?
ஏ.எஸ். முகுந்தன் இயக்கத்தில் ஆனந்தராஜ், சம்யுக்தா, முனீஸ்காந்த் நடிப்பில் காமெடி கலாட்டா நிறைந்த படமாக வெளியாகி இருக்கும் மதறாஸ் மாஃபியா கம்பெனி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Madharas Mafia Company Movie Review
ராய புரம் பகுதியில் தாதாவாக பேரெடுத்த பூங்காவனம் (ஆனந்தராஜ்), ரவுடித்தனத்தையே ஒரு ஐடி கம்பெனி மாதிரி ஒழுங்குபடுத்தி நடத்திவரும் வித்தியாசமான மனிதர். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக ஏஜென்ட்களை நியமித்து, அவர்களிடம் ‘அசைன்மென்ட்’ கொடுத்து சம்பவங்களை முடித்து விடுகிறார். இவ்வளவு கொலைகளுக்கு பின்னாலும், ஒரே ஒரு எஃப்ஐஆர் கூட அவர் மீது இல்லை என்பதால் அவரை அரெஸ்ட் பண்ண முடியாமல் திணறுகிறது போலீஸ். இதற்கு தீர்வாக இன்ஸ்பெக்டர் திகழ் பாரதி (சம்யுக்தா) தலைமையில் ஒரு ஸ்பெஷல் ஸ்க்வாட் உருவாக்கப்பட்டு, பூங்காவனத்தை என்கவுண்டரில் சிக்கவிடும் திட்டம் தீட்டப்படுகிறது. அந்த முயற்சியில் இருந்து பூங்காவனம் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மதறாஸ் மாஃபியா கம்பெனி விமர்சனம்
இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் ரவுடிசத்தை மையமாக வைத்து படத்தை எடுத்திருந்தாலும், ரத்தம் கொப்பளிக்கும் வன்முறைக்கு பதிலாக குடும்ப உணர்ச்சி, குறிப்பாக அப்பா–மகள் பந்தம் போன்ற எளிய விஷயங்களைச் சேர்த்து, கதையை லேசான நகைச்சுவையுடன் நகர்த்தி சென்றிருக்கிறார். இந்த அணுகுமுறை படம் முழுவதையும் இலகுவான அனுபவமாக மாற்றுகிறது. வில்லனாகத் துவங்கி, ஹீரோயிசத்திலும், பின்னர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் பயணித்த ஆனந்தராஜுக்கு, இந்த படம் மறுபடியும் ‘லீட் ரோல்’ ஒன்று கிடைத்ததுபோல உணர்த்துகிறது.
மதறாஸ் மாஃபியா கம்பெனி எப்படி இருக்கு?
கதை முழுதும் அவரைச் சுற்றித்தான் சுழல்கிறது. என்கவுண்டருக்காக வேட்டையாடும் சம்யுக்தாவைத் தவிர்க்க அவர் காட்டும் கிளெவரான மூவ்ஸும், வில்லத்தனமும் ரசிகர்களை கவரும். படம் தொடங்கும் சில காட்சிகளில் ஆனந்தராஜை காட்டி உடனே அடுத்த ஷாட்டில் ‘அஞ்சலி’ போஸ்டர் வருவது அதிர்ச்சியூட்டினாலும், அதன்பின்னர் வரும் பிளாஷ்பேக்கில் அவரது ரவுடி வாழ்க்கையும் அதனுடன் இணைந்த கத்திக்குத்து–காமெடி கலந்த துல்லியமான நடிப்பும் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது. கிளைமாக்ஸில் அவர் நடத்தும் கூத்து, படத்துக்கு இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற சிக்னலைத் தானாகவே கொடுக்கிறது.
மதறாஸ் மாஃபியா கம்பெனி ரிவ்யூ
ஆனந்தராஜை கொலை செய்ய எப்போதும் அவர் பின்னால் கத்தியுடனே சுற்றி, ஒவ்வொரு முறையும் பல்பு வாங்கும் முனிஷ்காந்தின் வேடம் காமெடிக்கு கியாரண்டி கொடுக்கிறது. ரவுடித்தனம், ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட்—இவை அனைத்தையும் சமநிலையுடன் கலந்த, சும்மா ரிலாக்ஸாக பார்த்து சிரிக்கச்செய்யும் ‘ஜஸ்ட் டைம் பாஸ்’ என்டர்டெய்ன்மென்ட் படம் இது. லாஜிக்கைக் கவனிக்காமல் பார்த்தால் இப்படம் நிச்சயம் கவரும்.