ஆரோமலே திரைப்படம் சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
நடிகர் தியாகுவின் மகன் சாரங் இயக்குனராக அறிமுகமாகி உள்ள படம் ஆரோமலே, கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆரோமலே படத்தின் கதை
காதலைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் இளைஞன் ஒருவன் அந்தக் காதலைக் கடைசியாக எப்படிப் புரிந்து கொள்கிறான் என்பதுதான் கதை. பள்ளியில் படிக்கும் நாயகன் கிஷன் தாஸ் ‘ விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தைப் பார்க்க நேர, பார்க்கும் எல்லாப் பெண்களும் தன்னைக் காதலிப்பதாக உணர்கிறார்.
அப்படி வகுப்புத்தோழியிடம் காதல் வயப்பட்டுத் தோற்று, பின் கல்லூரித் தோழி, அதற்குப்பிறகான தோழியைக் காதலித்து, அவள் திருமணத்தில் கலாட்டா செய்து காவல் நிலையம் போய்; கடைசியாக அப்பா சொல்படி ஒரு திருமண தகவல் மையத்தில் வேலைக்குப் போகிறார்.
அங்கே மேலாளராக இருக்கும் நாயகி ஷிவாத்மிகாவை வழக்கம் போல் காதலிக்க ஆரம்பித்து, ஆனால், கடுமையான அனுபவம் பெறுகிறார். அந்தக் காதல் என்ன ஆனது, கடைசியில் காதல் என்றால் என்ன என்பதை கிஷன் தாஸ் புரிந்து கொண்டாரா என்பதே மீதிக்கதை.
ஆரோமலே விமர்சனம்
வழக்கமாக தனுஷ் ஏற்கும் படியான பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், வேலைக்குப் போகும் இளைஞன் என்று மூன்று பருவ நிலைகளில் வரும் கிஷன் அவற்றுக்குப் பாக்காவாகப் பொருந்தி இருக்கிறார். ஷிவாத்மிகாவுக்கும், அவருக்குமான காட்சிகளை ரசிக்கலாம். யாருடைய ஆலோசனைகளையும் ஏற்காமல், தன் நிலையிலிருந்து சற்றும் மாறாமல் கடமையே கண்ணாக இருக்கும் ஷிவாத்மிகா அதிகமாகக் கவர்கிறார். உண்மையிலேயே அவர் தோற்றமும், நடிப்பும் அருமை.
ஆரோமலே படம் எப்படி இருக்கு?
கிஷனின் பள்ளிக் காலம் தொட்டு அவரது நண்பராக இருக்கும் ஹர்ஷத் கானின் அசால்ட்டான காமெடியும், நடிப்பும் படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது. கிஷனின் அம்மாவாக வரும் துளசியும், அப்பா முத்துராமனும் அதிகமாகக் கவர்கிறார்கள். அதிலும் அம்மா துளசி, கிஷனுக்குக் காதல் பற்றிப் புரிய வைக்கும் இடம் நெகிழ்ச்சியானது. அதற்குப் பின் கிஷன் பார்வையில் மட்டுமல்லாமல், நமக்கே அவரது அப்பா முத்துராமன் உயர்ந்து நிற்கிறார். விடிவி கணேஷின் பாத்திரம் கலகலப்பு மட்டுமல்லாமல் செண்டிமெண்டுக்கும் உதவுகிறது. விதவிதமாக ஆர்டர் செய்து சந்தானபாரதி ருசிப்பதை ரசிக்கலாம்.
ஆரோமலே படத்தின் ப்ளஸ், மைனஸ் என்ன?
ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன் இந்த இளமைப் படத்துக்கான சரியான தேர்வு. சென்னையை மெருகேற்றிக் காட்டியிருக்கிறார். அதேபோல் தான் சித்துகுமாரின் இசையும். பாடல்களிலும், பின்னணி இசையிலும் அவரது சித்து விளையாட்டு சரியாக வேலை செய்திருக்கிறது. இளமையான ஒரு கதையை அதன் அழகுகளுடன் இயக்கி இருக்கும் சாரங் தியாகுவுக்கு முன்னணி இயக்குனராகும் அத்தனைத் தகுதியும் இருக்கிறது. தட்டையான மற்றும், இதுதான் நடக்கப் போகிறது என்று தெரிந்தும் இழுவையாக நீளும் பின்பாதி திரைக்கதையை இன்னும் செதுக்கி இருக்கலாம். ஆனாலும், காதலைப் புரிய வைப்பதில் ஃபீல் குட் படமாக இருக்கிறது ஆரோமலே.