- Home
- Politics
- ஸ்டாலின் ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல்..! ஆளுநரிடம் ஆதாரத்தோடு பட்டியலைக் கொடுத்த இபிஎஸ்..!
ஸ்டாலின் ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல்..! ஆளுநரிடம் ஆதாரத்தோடு பட்டியலைக் கொடுத்த இபிஎஸ்..!
எல்லாவற்றுக்கும் போதிய ஆதாரம் கொடுத்து இருக்கிறோம். எனவே, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அதற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

‘திமுக ஆட்சியில் நடைபெற்ற 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, என்று கோரிக்கை வைத்தார்.
ஆளுநரை சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், ‘‘இன்று ஆளுநரை சந்தித்து 2021 முதல் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்த பட்டியலை வழங்கி இருக்கிறோம். நாலரை ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு துறைகளில் அடிக்கப்பட்ட ஊழல் விவகாரங்களை ஆளுநரிடம் வழங்கி இருக்கிறோம். ஊழல் குறித்து போதிய ஆதாரம் உள்ளதால் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று, வலியுறுத்தியுள்ளோம். கடந்த 56 மாதங்களாக வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் அதிகார உச்சத்தில் இருக்கும் திமுக குடும்பம், கோடிக்கணக்கில், கொள்ளையடித்து தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது. இதை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
திமுக கடந்த 56 மாதங்களாக, ஆண்டிற்கு 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி தமிழ்நாட்டை மிக கேவலமாக நிர்வாகம் செய்துள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த கடனை விட கூடுதலாக, சுமார் 4 லட்சம் கோடி கடனாக அதிகரித்துள்ளது. நிர்வாகத் திறனற்ற அரசு என்பதுதான் திமுக அரசின் சாதனை. ஆட்சிக்கு வந்த ஓர் ஆண்டிலே திமுக அரசு கொள்ளை குறித்து ஆடியோவில் தெரியவந்தது. 30 ஆயிரம் கோடி ரூபாயை வைத்துக்கொண்டு, சபரீசனும், உதயநிதியும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாக அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியானது. ஓர் ஆண்டுக்கே இவ்வளவு தொகை என்றால், இந்த நாலரை ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் என்று, கணக்கிட்டுப் பாருங்கள்.
ஊழல் செய்வதை தவிர தமிழக மக்களுக்கு இவர்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக அரசு. அந்த வகையில் அரசின் பல்வேறு துறைகளில் மிக அதிக அளவில் ஊழல் செய்து, தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்பதை ஆளுநர் அவர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். துறை வாரியாக எவ்வளவு ஊழல் நடைபெற்றது என்பதை தெரிவித்திருக்கிறோம்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீ்ர் வழங்கல் துறை ஊழல் - 64 ஆயிரம் கோடி. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஊழல் - 60 ஆயிரம் கோடி சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை ஊழல் - 60 ஆயிரம் கோடி. ஏரிசக்தி துறை ஊழல் - 55 ஆயிரம் கோடி. கலால் வரி (டாஸ்மாக்) ஊழல் - 50 ஆயிரம் கோடி. பத்திரப்பதிவுத்துறை ஊழல் - 20 ஆயிரம் கோடி. நெடுஞ்சாலைத்துறை ஊழல் - 20 ஆயிரம் கோடி.
நீர் ஆதாரத்துறை ஊழல் - 17 ஆயிரம் கோடி. சென்னை மாநகராட்சி ஊழல் 10 ஆயிரம் கோடி. தொழில்துறை ஊழல் - 8 ஆயிரம் கோடி.
பள்ளிக்கல்வித்துறை ஊழல் - 5 ஆயிரம் கோடி.மக்கள் நல்வாழ்வுத்துறை ஊழல் - 5 ஆயிரம் கோடி. ளாண்மைத்துறை ஊழல் - .5 ஆயிரம் கோடி. சமூகநலத்துறை ஊழல் - 4 ஆயிரம் கோடி. யர்கல்வித்துறை ஊழல் - 1500 கோடி. இந்து சமய அறநிலையத்துறை ஊழல் - 1000 கோடி.தி திராவிடர் நலன் துறை ஊழல் - 1000 கோடி. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஊழல் - 750 கோடி. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை ஊழல் - 500 கோடி. சிறைத்துறை ஊழல் - 500 கோடி. சுற்றுலாத்துறை ஊழல் - 250 கோடி. பால்வளத்துறை ஊழல் - 250 கோடி.
இப்படி பல்வேறு துறைகளிலும் கொள்ளையடிப்பது எப்படி என்பதில்தான், திமுக குறியாக இருக்கிறது. அதனால் ஆட்சி நிர்வாகம் சீராக இல்லாமல், சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துள்ளது. மக்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. எனவே, தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த முதலீடுகள் அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டன.
நாங்கள் கொடுத்திருக்கும் பட்டியல் படி திமுகவின் நாலரை ஆண்டு கால ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் குறித்த ஆதாரங்களையும், முழுமையான விவரங்களையும் நாங்கள் ஆளுநரிடம் கொடுத்து இருக்கிறோம். பல்வேறு துறைகளில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும், இந்த விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்…’’ என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு இபிஎஸ் பதிலளித்தார்.
எந்த அடிப்படையில் ஊழல் குறித்து பட்டியலிட்டீர்கள்..? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், ‘‘எல்லாவற்றுக்கும் போதிய ஆதாரம் கொடுத்து இருக்கிறோம். எனவே, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அதற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்’’ என்றார்.
திமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் கொடுத்துள்ளீர்கள், உங்கள் ஆட்சியிலும், அமைச்சர்கள் மீது திமுகவினர் புகார் பட்டியல் கொடுத்தார்களே..? என்ற கேள்விக்கு. ‘‘இதை திசை திருப்ப வேண்டாம். இந்த ஊழல் விவகாரத்தை மட்டும் பேசுங்கள். அதெல்லாம் ஏற்கனவே பல முறை கேட்டு, அதற்கு பதில் அளித்துவிட்டோம். இப்போது, இந்த விவகாரம் குறித்து மட்டும் கேளுங்கள். அதை கேட்க மறுக்கிறீர்கள். இதை மடைமாற்றுவது பொருத்தமாக இருக்காது. ஏற்கனவே நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து விட்டோம். என் மீது கூட வழக்கு போட்டார்கள். உயர்நீதிமன்றத்திலேயே நான் வழக்கு நடத்தச் சொன்னேன். வழக்கு போட்ட ஆர்.எஸ்.பாரதியே அதை திரும்பப் பெறுகிறோம் என்றார். ஆனால், நாங்கள் நிரபராதி என்று நிரூபித்து தான் நிற்கிறோம்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. அமலாக்கத்துறை, இரண்டு முறை, ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டி அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதாரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அரசு இன்னும் எஃப்.ஐ.ஆர் போடவில்லை. அதை பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேளுங்கள். அதை கேட்க மறுக்கிறீர்கள்.
அதேபோல் கிட்னி முறைகேடு, இந்த அரசாங்கமே கண்டுபிடித்து, அதற்கு ஒரு குழு போட்டு, அந்த குழு சென்று ஆய்வு செய்து, முறைகேடு நடந்தது உண்மை என்று, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. அதன் மீது இதுவரை திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது.? அது யாருடைய மருத்துவமனை…?
திமுக எம்எல்ஏவிற்கு சொந்தமான மருத்துவமனை என்பதனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை பற்றி எல்லாம் கேள்வி எழுப்புங்கள். இதற்கு விவாத மேடை வையுங்கள். ஒரு டிவியாவது இந்த கிட்னி முறைகேடு குறித்து விவாத மேடை வைத்தீர்களா? அதிமுக தும்மினால் கூட விவாதமேடை வைக்கிறீர்கள். இருமினால் விவாதிக்கிறீர்கள். இவ்வளவு பெரிய நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு கொடுமையான நிகழ்வு, வறுமையைப் பயன்படுத்தி, பணத்தாசை கட்டி, அந்த ஏழைகளிடம் இருந்து கிட்னி திருடி இருக்கிறார்கள். இதற்கு, என்ன நடவடிக்கை திமுக அரசு எடுத்தது.? ஆனால், மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.
