‘பேரிழப்பு’‘இயற்கையின் அவசர பறிப்பு’... விவேக் மறைவிற்கு துணை முதல்வர் டூ விஜயகாந்த் வரை உருக்கமான பதிவு..!
நடிகர் விவேக் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் திரு.விவேக் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய திரு.விவேக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு,மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர்.
பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார்.திரு.விவேக் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்”
நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர். தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஈடு இணை செய்ய முடியாத அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் மீது அக்கறை கொண்டு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து 'சின்ன கலைவாணர்' என போற்றப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை. தன்னலம் பார்க்காமல் சமூக அக்கறையோடு சேவை புரிந்து வந்த நடிகர் விவேக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தேமுதிக பொதுச்செயலாளரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரர் பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்களால் சின்னக் கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர். சிறந்த சுற்றுச் சூழல் ஆர்வலராக பல இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்துள்ளார்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திரு.விவேக் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமே பேரிழப்பாகும். அந்தளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் , செயற்பாட்டாளராகவும் திரு.விவேக் திகழ்ந்தார். “சனங்களின் கலைஞன்” எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். திரு. விவேக் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் , திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை நெஞ்சில் தேக்கி நகைச்சுவையாக வெளிப்படுத்தினார் நடிகர் விவேக் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.