கூட்டணிக்கு புது செக்..! எடப்பாடியார் தலையில் இடியை இறக்கும் தேமுதிக – பாமக..!
முன்பு அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் ‘அமைச்சரவையில் பங்கு’ என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாமக, தேமுதிக கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. பாமக தற்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூடணியில் உள்ளது. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் எதுவும் வெல்லாததால், அக்கட்சி அதிமுக கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது.
ராமதாஸ் 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி என்று கூறி, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்தார். அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள். தேமுதிக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. தேமுதிக அதிமுக கூட்டணியில் 10-15 சட்டமன்றத் தொகுதிகளை கோரி பேச்சுவார்த்தை நடத்துகிறது. ராஜ்யசபா சீட்டும் கேட்டு வருகிறது. ஆனால், பாமக சேர்வதால் சீட் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘‘பா.ம.க அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழகத்தில் 2026ல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என டாக்டர் ராமதாஸ் கூறி வருகிறார். ‘தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் 2026ல் ஆட்சியமைக்கும். தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள்’ என பிரேமலதாவும் பேசி வருகிறார். கடந்தமுறை தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக கூறியிருந்த எடப்பாடி பழனிசாமி அந்த வாக்குறுதியை தேமுதிகவுக்கு நிறைவேற்றவில்லை என்கிற ஏமாற்றம் பிரேமலதாவுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இம்முறை அப்படி நடக்காது. நிச்சயம் ராஜ்ய சபா சீட் உறுதி என எடப்பாடி பழனிசாமி சத்தியம் செய்யாத குறையாக அடித்துக் கூறி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் பிரேமலதா அசைந்து கொடுக்கவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில், மதுரை கூடல் நகர் பகுதியில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா , ‘‘தமிழகத்தில் ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது தேமுதிக .கேப்டனின் கனவு லட்சியம் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிறைவேறும். நீங்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும்.
வருகின்ற 2026 சட்டமன்றத்தில் கூட்டணி அமைச்சரவை அமையும். தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக அமைச்சரவையிலும் இடம் பெற வாய்ப்பு உள்ளது’’ எனக் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆட்சியில் பங்கு என கூறி வரும் நிலையில், முன்பு அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் ‘அமைச்சரவையில் பங்கு’ என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.