செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியல! கோர்ட்டில் புலம்பிய அமலாக்கத்துறை! அடுத்து என்ன நடக்கும்?
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வில் அமலாக்கத்துறை முறையீடு செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்தது.
அப்போது திடீரென அவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில் இருதய பகுதியில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியிடம் 15 நாட்கள் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 8 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. மருத்துவர்களின் அனுமதியோடு விசாரணை நடத்த வேண்டும், குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதன்படி கடந்த 4 நாட்களாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த தீவிரம் காட்டியது. ஆனால் அமலாக்கத்துறையால் முடியவில்லை.
இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு காவலில் எடுக்க முடியவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வில் அமலாக்கத்துறை முறையீடு செய்துள்ளது. ஆனால், இது தொடர்பாக மனு எதையும் அமலாக்கதுறை தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.