தமிழை பார்த்தேன் என யாராவது சொன்னால்.. ரூ. 5 கோடி பரிசு தருகிறேன்.. ராமதாஸ் அறிவிப்பு..!
பள்ளி கல்லூரி நீதிமன்றத்தில் தமிழை பார்த்தேன் என யாராவது சொன்னால் ரூ.5 கோடி பரிசு தருகிறேன் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தமிழ்நாட்டில் எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்பது தான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால், இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை; ஆலயங்களில் தமிழ் இல்லை; உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை; வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை; வீடுகளில் தமிழ் இல்லை; தாய்க்கும் சேய்க்குமான உரையாடல்களில் தமிழ் இல்லை.
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்றும் வகையில், அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும்; அதற்காக தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும்; பள்ளிகளில் தொடங்கி கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதான் இன்று முதல் சென்னையில் தமிழை தேடி என்ற பரப்புரை மேற்கொள்கிறேன் என்றார்.
அதன்படி டாக்டர் ராமதாசின் தமிழை தேடி பிரச்சார பயணம் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை தொடங்கியது. இதில் ஏராளமான பாமகவினர் திரண்டனர். பொங்குதமிழ் அறக்கட்டளை தலைவரும் பா.ம.க. கவுரவ தலைவருமான ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தலைமை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழ் அறிஞர்கள் அரு கோயிலன், தமிழண்ணல் கோ.பெரியண்ணன், புலவர் சுந்தரராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் எழுதிய எங்கே தமிழ் என்ற நூலை சீர்காழி சிவ சிதம்பரம் வெளியிட்டார். முதல் பிரதியை புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து டாக்டர் ராமதாஸ் தமிழை தேடி பிரசார பயணத்தை தொடங்கினார்.
அப்போது ராமதாஸ் பேசுகையில் தமிழை பள்ளிகள் கல்லூரிகள், நீதிமன்றங்களில் எங்காவது பார்த்தேன் என யாராவது கூறினால் அவருக்கு நான் 5 கோடி ரூபாய் பரிசு தருகிறேன். தமிழ் இருக்கு என யாராலும் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். தமிழை பாதுகாக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதை செய்வோம். நாங்கள் செய்யாதது ஏதேனும் இருக்கிறதா என ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.