- Home
- Politics
- அமித் ஷாவின் பேச்சை மீறிய இபிஎஸ்..! தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அதிமுகவுக்கு சிக்கல்..!
அமித் ஷாவின் பேச்சை மீறிய இபிஎஸ்..! தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அதிமுகவுக்கு சிக்கல்..!
ஓபிஎஸும், சசிகலாவும் வழக்கை திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என்ற வகையில் வந்திருந்தால் கூட இபிஎஸ் ஒருவேளை சேர்த்துக் கொண்டு இருக்கலாம். அது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக மாறிவிடுமோ என்கிற அச்சத்தால் இபிஎஸ் தயங்குகிறார்.

டெல்லியில் உடைத்த எடப்பாடியார்
ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என குரல் கொடுக்கும் ஓபிஎஸ், சசிகலாவ அதிமுகவில் சேர்த்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு ‘‘அதற்கு வாய்ப்பே கிடையாது. நிச்சயம் சேர்த்துக் கொள்ளமாட்டோம்’’ என திட்டவட்டமாகச் சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில் அதிமுக ஒன்றுபட்டால் மட்டும்தான் அந்த இயக்கம் ஒரு மாபெரும் பலம் பெற முடியும். திமுகவை வீழ்த்த முடியும் என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமித்ஷா இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்திருந்தார். புதுக்கோட்டையில் நடந்த நயினார் நாகேந்திரன் பரப்பரை கூட்டத்தில் அமித்ஷாவும் கலந்து கொண்டிருந்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்திப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
எடப்பாடி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்
ஆனால் அப்போது வேலுமணி போன்றவர்கள் மட்டும்தான் சந்தித்தார்கள். இப்போது டெல்லிக்கே சென்று ஓபிஎஸ், சசிகலாவை சேர்த்துக்கொள்ள முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பாஜகவுக்கும் ஒரு மெசேஜாக சொல்லி இருக்கிறார். இதை ஓபிஎஸ், சசிகலாவுக்கு மட்டுமே சொன்ன செய்தியாக பார்க்க முடியாது. ஏனென்றால் அவர் சொல்லுகின்ற விதமும், காலமும் முக்கியமானது. டெல்லிக்கு சென்று இதைச் சொல்கிறார். இதை பாஜகவுக்குமான ஒரு மெசேஜ் ஆகத்தான் அவர் கடத்துகிறார்.
மிக முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமி பார்வையில் இருந்து இதை அணுகினால் அதிமுக தொடர்பான வழக்குகளை ஓபிஎஸ், சசிகலா இருவரும் தொடர்ந்து உள்ளார்கள். ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பொருந்தும். பொதுச்செயலாளர் பதவிக்காக வழக்கு தொடர்ந்து இருக்கக்கூடிய சசிகலாவுக்கும் பொருந்தும். டெல்லி சந்திப்பில் அமித் ஷாவிடம் ‘‘நான் இந்த இருவரையும் மீண்டும் சேர்த்துக் கொள்ளவே மாட்டேன்’’ என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருப்பார். இது தேர்தல் ரீதியாக அதிமுகவுக்கு பின்னடைவாக இருக்கும். ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவோ வெளியில் இருக்கிறபோது அது அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சசிகலா- ஓபிஎஸால் அபாயம்
டிடிவி.தினகரன் விஷயத்தில் இபிஎஸ் எதுவும் சொல்லவில்லை. பூடகமாக சில தகவல்களை தெரிவித்திருக்கிறார். டிடிவி.தினகரனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தென் மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் கணிசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி 21 தொகுதிகளில் தோல்வி அடைவதற்கு அமமுக காரணமாக இருந்தது. இதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி டிடிவி.தினகரனை ஒரு வகையில் அணுகுகிறார். ஓபிஎஸ், சசிகலாவை இன்னொரு கோணத்தில் அணுகுகிறார். ஓபிஎஸ், சசிகலா அவர்களும் உரிமை கோரல் தொடர்பாக சில வழக்குகளை தொடர்ந்து இருக்கிறார்கள். டிடிவி. தினகரன் தனி கட்சியாக, தனி அமைப்பாக இருக்கிறார். ஆகையால் டிடிவி.தினகரனை எடப்பாடி பழனிசாமி ஒரு இடையூறாக பார்க்கவில்லை.
அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என அமித் ஷா இபிஎஸிடம் சொல்லியிருந்தார். இதெல்லாம் உள் விவகாரம் தான். ஓபிஎஸ், சசிகலாவை சேர்த்துக் கொள்வதாக இருந்தால் அது உள் விவகாரத்தில் தலையிடுவது தான் என அமித்ஷாவிடம் பேசி இருக்கிறார். ஓபிஎஸ்-க்கு இன்னொரு வாசல் திறக்கப்பட்டிருக்கிறது. அவர் இப்போது திமுக நோக்கியோ, தவெக நோக்கியோ போவதற்கான ஒரு வாய்ப்பு திறந்து இருக்கிறது. மீண்டும் அதிமுக இணைப்பு சாத்தியமில்லை என்பதை எடப்பாடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் இது எந்த வகையில் பார்த்தாலும் அதிமுகவுக்கு தேர்தல் ரீதியாக பின்னடைவாகத்தான் இருக்கும்.
டிடிவி.தினகரனின் வாக்கு... செல்வாக்கு..!
ஓபிஎஸும், சசிகலாவும் வழக்கை திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என்ற வகையில் வந்திருந்தால் கூட எடப்பாடி பழனிச்சாமி ஒருவேளை சேர்த்துக் கொண்டு இருக்கலாம். அந்த வழக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் எங்களை உள்ளே சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டால் அது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக மாறிவிடுமோ என்கிற அச்சம் இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி தயங்குகிறார். ஓபிஎஸ், ராமநாதபுரத்தில் மூன்று லட்சம் வாக்குகள் வாங்கினார். ஆனால் மற்ற வேட்பாளர்களை அவர் தரப்பில் நிறுத்தவில்லை. ஆனால், டிடிவி.தினகரன் நிரூபிக்கப்பட்ட வாக்கு வங்கிகளை வைத்திருக்கிறார். 21 தொகுதிகளில் வெற்றியை பாதித்து இருக்கிறார். அதேவேளை அமமுகவுக்கு அன்றிலிருந்த செல்வாக்கு இன்று இல்லை. நிர்வாகிகள் மீண்டும் அதிமுக பக்கம் சென்று விட்டார்கள். இருந்தாலும் அவர் தேர்தலை சந்தித்து இருக்கிறார். தனி அமைப்பாக இயங்கி வருகிறார்’’ என்கிறார்கள்.
