- Home
- Politics
- TVK VIJAY MOVE: ஆளுநர் மூலம் ஆட்டத்தை தொடங்கிய டெல்லி.! விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் எதிர்க்கட்சிகள்.! இதுதான் தமிழகம்.!
TVK VIJAY MOVE: ஆளுநர் மூலம் ஆட்டத்தை தொடங்கிய டெல்லி.! விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் எதிர்க்கட்சிகள்.! இதுதான் தமிழகம்.!
தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தும், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஆளுநரின் தாமதமும், டெல்லியின் தலையீடும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதால் மாநில உரிமைக்காக எதிர்க்கட்சிகள் விஜய்க்கு மறைமுக ஆதரவு அளித்து வருகின்றன.

பரபரப்பான சூழல்
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், முழுமையான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து தொடங்கிய அரசியல் நகர்வுகள் அனைத்தும் டெல்லியின் அரசியல் சதுரங்கமாகவே பார்க்கப்படுகின்றன.
தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி சென்றபோதும், “118 உறுப்பினர்களின் தெளிவான ஆதரவு இருந்தால்தான் அழைப்பு” என்ற நிலைப்பாட்டில் ஆளுநர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியலில் புதிய விவாதம் உருவாகியுள்ளது. “தனிப்பெரும் கட்சிக்கு முதலில் வாய்ப்பு வழங்க வேண்டும்” என்ற அரசியல் மரபை மீறி ஆளுநர் செயல்படுகிறாரா என்ற கேள்வி எதிர்க்கட்சிகளிடையே எழுந்துள்ளது.
நிலைப்பாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல்
இதுவரை விஜய்யை கடுமையாக விமர்சித்த பல கட்சிகளே இப்போது ஆளுநரின் நிலைப்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. “தமிழக மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்”, “டெல்லியின் அரசியல் தலையீடு ஏற்க முடியாது” என்று பல தரப்பிலிருந்தும் கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக மொழி, மாநில உரிமை, ஆளுநர் அதிகாரம் போன்ற விஷயங்களில் எப்போதுமே மத்திய அரசுக்கு எதிராக இருந்த கட்சிகள், தற்போது விஜய்க்கு மறைமுக ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கட்டம் கட்டி அடிக்கும் டெல்லி
இதற்கிடையில், மத்திய அரசின் “பிஎம் ஸ்ரீ” பள்ளிகள் திட்டம் மீண்டும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை விவாதத்தை தூண்டியுள்ளது. “நிதி வேண்டும் என்றால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்” என்ற அழுத்தம் தமிழக அரசியலை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. தமிழ் மொழி, மாநில உரிமை, கல்விக் கொள்கை ஆகியவை மீண்டும் தேர்தல் பிந்தைய அரசியலின் மையமாக மாறியுள்ளன.
அதேநேரத்தில் விஜய்க்கு எதிராக வருமான வரி மற்றும் சொத்து விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியிருப்பதும் அரசியல் ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. “ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சட்ட ரீதியான அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்ற பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவி வருகிறது.
தமிழ் மண்ணின் அரசியல் தன்மை
ஆனால் இந்த முழு விவகாரத்திலும் தமிழக அரசியலின் பழைய உண்மை மீண்டும் வெளிப்படுகிறது. டெல்லியில் இருந்து அழுத்தம் வந்தாலே, தமிழ்நாட்டில் எதிர் அரசியல் ஒன்று சேர ஆரம்பிக்கும். அதுதான் இந்த மண்ணின் அரசியல் தன்மை. நேற்று வரை எதிரிகளாக இருந்தவர்கள்கூட, மாநில உரிமை என்ற விஷயத்தில் ஒரே வரிசையில் நிற்பது தமிழகம் பலமுறை பார்த்த காட்சி.
எப்படி சமாளிக்கப் போகிறார்?
இப்போது அனைவரின் பார்வையும் விஜய் மீது திரும்பியுள்ளது. அரசியல் அனுபவம் குறைவாக இருந்தாலும், இந்த நெருக்கடியை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார்? எதிர்க்கட்சிகளின் இந்த ஆதரவை அரசியல் பலமாக மாற்றுவாரா? அல்லது டெல்லியின் அழுத்த அரசியலில் சிக்கிக் கொள்வாரா? என்பதே அடுத்த சில நாட்களில் தமிழக அரசியலை தீர்மானிக்கப் போகும் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

