கமலாலயம் கடல் போலத் தோற்றமளிக்கும் ஆனாலும் அது குளம்தான்- பாஜகவை சீண்டும் மு.க.ஸ்டாலின்
திருவாரூர் கமலாலயக் குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் மூலம் குளத்தின் நடுவில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமலாலய குளம் தொடர்பாக தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
திருவாரூரில் ஸ்டாலின்
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர், இந்த ஊரில் உள்ள குளம் மிகவும் பிரபலமானது, அந்த குளம் தொடர்பான பல்வேறு தகவல்களை கருணாநிதி தனது நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். கருணாநிதி எப்போதும் திருவாரூர் சென்றாலும் அந்த இடத்தை பார்க்காமல் செல்லமாட்டார். இந்தநிலையில் தான் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞர் அருங்காட்சியகம் மற்றும் நெல் சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதனையடுத்து திருவாரூர் சந்நிதி தெருவுக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்த மக்களிடம் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நினைவிடத்தில் மரியாதை
இதனையடுத்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ள காட்டூருக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அந்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியம் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இதனையடுத்து திருவாரூர் கமலாலயக் குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் மூலம் குளத்தின் நடுவில் உள்ள நடுக்குள நாகநாத சுவாமி கோயிலுக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது தனது பழைய நினைவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணனிடம் பகிர்ந்து கொண்டார்.
கமலாலயம் கடல் அல்ல குளம்
இதனையடுத்து இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், “கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்!” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்