முதலமைச்சர் ஸ்டாலினை திடீரென சந்தித்து பேசிய சி.ஆர்.சரஸ்வதி..! திமுகவில் இணைகிறாரா? உண்மை காரணம் என்ன.?
அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் டிடிவி அணியில் இணைந்த சி.ஆர்.சரஸ்வதி, முதலமைச்சர் ஸ்டாலினை இன்று திடீரென சந்தித்து பேசியது அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சி.ஆர் சஸ்வதியும் அதிமுகவும்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஜெயலலிதாவின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது. காலை உணவாக இட்லி சாப்பிட்டார் என கூறி டிரெண்டிங்கில் இடம்பெற்றவர் சி. ஆர். சரஸ்வதி, இவர் 1979 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சுவர் இல்லாத சித்திரங்கள், எங்க சின்ன ராசா, அமைதிப்படை, கர்ணா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஜெயலலிதா மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக 1999 ஆம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 2014 ஆம் ஆண்டில், ஜெயலலிதாவால் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஸ்டாலினை சந்தித்த சிஆர் சரஸ்வதி
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். அங்கும் தற்போது செய்தி தொடர்பாளராக சி.ஆர்.சரஸ்வதி செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார்.
இதன் ஒரு பகுதியாக அசோக்நகர் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது அமமுக நிர்வாகியான சி.ஆர்.சரஸ்வதி முதலமைச்சரை சந்தித்து சிறிது நேரம் பேசினார். எதிர்கட்சியாக இருக்கும் சி.ஆர்.சரஸ்வரதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சரை சந்தித்தது ஏன்.?
இந்தநிலையில் முதலமைச்சரை சந்தித்து பேசியது தொடர்பாக விளக்கம் அளித்த சி.ஆர்.சரஸ்வதி, முதலமைச்சர் எனது வீட்டருகே ஆய்வு செய்ய வந்தார். இதன் காரணமாக மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். முதலமைச்சர் என்னை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து என்னிடம் பேசினார். இதனை நான் நினைக்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. முதலமைச்சரிடம் எங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை சொன்னேன்.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது பற்றி கூறினேன். இதற்கு முதலமைச்சர் இதற்காகத்தான் ஆய்வு செய்ய வந்தேன் விரைவில் பணிகளை முடித்து விடுவோம் என கூறினார். முதலமைச்சர் மக்கள் பணியை நேரில் வந்து பார்ப்பது நல்ல விஷயம் இதை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.