அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது.. நாங்க பாக்குற இடத்துல பாத்துக்குறோம்.. பாயிண்டை பிடித்த ஓபிஎஸ் டீம்.!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், அதிமுகவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்க உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தன்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் பணிகளில் இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 26ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் 18ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு 26ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை 27ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது. நாங்கள் தான் அதிமுக என மக்கள் மத்தியில் நிரூபிப்போம். தேர்தல் ஆணைய பிரமாண பத்திரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்றுதான் இதுவரை உள்ளது.
விண்ணப்பங்களை யாருக்கும் கொடுக்காமல் உறுப்பினர் அட்டை கொடுத்துள்ளனர். அரசியல் மோசடியை எடப்பாடி பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார் என வைத்தியலிங்கம் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயக்குமார் கூறுகையில்;- கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துகிறோம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தேர்தல் குறித்து பேச தகுதியில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது. எந்த வீதிமீறலும் இல்லை என தெரிவித்துள்ளார்.