- Home
- Politics
- பங்காளிகள் சமாதானத்தில் பலியான தர்மம்..! கழுத்தறுத்த அதிமுக-வுக்குப் பாடம்..! டாக்டர். திருப்பதியின் திருப்பத்தூர் சபதம்..!
பங்காளிகள் சமாதானத்தில் பலியான தர்மம்..! கழுத்தறுத்த அதிமுக-வுக்குப் பாடம்..! டாக்டர். திருப்பதியின் திருப்பத்தூர் சபதம்..!
‘ ‘திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்தை விட, தன் கட்சிக்காரரே வளர்ந்துவிடக்கூடாது என்ற கே.சி.வீரமணியின் ‘குள்ளநரித் தனமான’ பயமே இந்த வாய்ப்பு மறுப்புக்குக் காரணம் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.’’

தன்னல அரசியல்
அரசியல் என்பது கொள்கைக்கான களம் என்பதைத் தாண்டி, இன்று அது ‘நயவஞ்சகத்தின் சதுரங்கமாக’ மாறி நிற்பது வேதனை. குறிப்பாக, திருப்பத்தூர் மண்ணில் கடந்த சில நாட்களாக அரங்கேறி வரும் நிகழ்வுகள், உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கும், நிர்வாகிக்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி. டாக்டர் திருப்பதியின் இருபது ஆண்டுகால உழைப்பு, மக்களின் நன்மதிப்பு, தொகுதி முழுமைக்கும் பரவியிருக்கும் நற்பெயர் என அனைத்தையும் ஒரு கணம் கூட யோசிக்காமல், ‘தன்னல அரசியல்’ எனும் பலிபீடத்தில் ஏற்றிய அதிமுக தலைமைக்கும், அதன் பின்னணியில் இருந்த உள்ளூர் புள்ளிகளுக்கும் திருப்பத்தூர் மக்கள் உரிய பாடம் புகட்டும் காலம் கனிந்துவிட்டது என கொந்தளிக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
உழைப்புக்குக் கிடைத்த ‘பரிசு’ துரோகமா?
டாக்டர் என். திருப்பதி - இந்த பெயர் திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்தில் வெறும் அரசியல் அடையாளம் மட்டுமல்ல; அது கடந்த இருபது ஆண்டுகளாக மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்த ஓர் ஆளுமை. அதிமுக கோட்டையாக இருந்த தொகுதியை மீண்டும் மீட்பதற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு, பகல் பாராமல் டாக்டர் திருப்பதி ஆற்றிய களப்பணிகள் ஊர் அறிந்த ரகசியம். திமுக-வின் கோட்டை என்று சொல்லப்படும் திருப்பத்தூரில், அவர்களின் செல்வாக்கைச் சிதைக்கக்கூடிய ஒரே வேட்பாளராக அவரே முன்மொழியப்பட்டார். எம்.பி., தம்பிதுரை முதல், தலைமை வரை அனைவரும் வேட்பாளராக ‘டிக்’ அடித்த பெயராக இருந்தும், கடைசி நேரத்தில் நடந்த அந்த ‘அரசியல் பேரத்தின்’ பின்னணி ரத்தத்தின் ரத்தங்களை சூடேற்றி உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் அதிமுகவினர் கூறுகையில், ' 'திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்தை விட, தன் கட்சிக்காரரே வளர்ந்துவிடக்கூடாது என்ற கே.சி.வீரமணியின் ‘குள்ளநரித் தனமான’ பயமே இந்த வாய்ப்பு மறுப்புக்குக் காரணம் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. கே.சி.வீரமணியின் நிழல் யுத்தமும், தன் செல்வாக்குக்குச் சவாலாக யாரும் வந்துவிடக் கூடாது என்ற குறுகிய மனப்பான்மையும், ஒரு தகுதியான வேட்பாளரைத் தள்ளி வைத்திருக்கிறது. இது டாக்டர் திருப்பதிக்கு இழைக்கப்பட்ட துரோகம் மட்டுமல்ல, திருப்பத்தூர் அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையின் மீது வீசப்பட்ட நெருப்பு. அதனால்தான், தேர்தல் அலுவலகத்தின் முன்னே தொண்டர்கள் கதறியழுததும், ஒருவர் தீக்குளிக்க முயன்றதும் ஆவேசத்தின் உச்சமாக அமைந்தது.
பங்காளி சமாதானத்தில் பலியான தர்மம்
அதிமுக - அமமுக இணைப்பு என்பது ‘பங்காளி சண்டை முடிந்துவிட்டது’ என மேடைக்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கலாம். ஆனால், களத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த டாக்டர் திருப்பதி போன்ற நிர்வாகிகளை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, தொகுதியைத் தாரை வார்த்தது எந்த விதத்தில் நியாயம்? “எங்களுக்குள் ஒற்றுமை வந்துவிட்டது” என்று எடப்பாடியும், டிடிவியும் சொல்வது, பல ஆண்டுகளாகக் கட்சிக்காக ரத்தம் சிந்திய தொண்டர்களின் முதுகில் குத்துவதற்குச் சமம். அமமுக-வுக்குத் தொகுதியை ஒதுக்கியதன் மூலம், அதிமுக இந்தத் தொகுதியில் போட்டியிடாமலேயே சரணடைந்துவிட்டது.
இந்தத் துரோகத்தைச் சகித்துக்கொண்டு மௌனமாக இருக்க டாக்டர் திருப்பதி ஒன்றும் முதுகெலும்பில்லாத அரசியல்வாதி அல்ல. துரோகம் இழைக்கப்பட்ட இடத்தில் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த அவர், மாற்றத்தின் அடையாளமாகத் திகழும் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டது காலத்தின் கட்டாயம். விஜய், டாக்டர். திருப்பதியின் உழைப்பையும், மக்கள் செல்வாக்கையும் சரியாகக் கணித்து அவருக்கு வாய்ப்பளித்திருப்பது, திருப்பத்தூர் அரசியலில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது.
தவெக: துரோகத்தை வேரறுக்கும் ஆயுதம்
இன்று திருப்பத்தூர் தொகுதி முக்கோணப் போட்டியில் இல்லை. அது ‘உண்மைக்கும் - துரோகத்திற்கும்’ இடையிலான போர். ஒருபுறம், இரண்டு முறை வென்றும் தொகுதிக்கு உருப்படியாக எதுவும் செய்யாத, அமைச்சராக முடியவில்லையே என்ற ஏக்கத்திலேயே இருக்கும் திமுக. மறுபுறம், சொந்தக் கட்சி வேட்பாளரையே காட்டித் தடுத்த அதிமுக-வின் உள்ளடி வேலைகள். இந்த இரண்டிற்கும் நடுவே, ‘மக்களுக்காக உழைக்க வேண்டும்’ என்ற ஒற்றை இலக்கோடு களம் காண்கிறார் டாக்டர் திருப்பதி.
அதிமுகவினரும், திமுகவினரும் இப்போது திகிலடைந்து போயிருக்கிறார்கள். காரணம், டாக்டர் திருப்பதிக்கு இருக்கும் அதே பணபலம், ஆள்பலம் மற்றும் ஜாதி ரீதியான செல்வாக்கு இப்போது தவெக-வின் இளைஞர் பட்டாளத்தோடு கைக்கோர்த்துள்ளது. “அண்ணன் ஜெயிச்சா கண்டிப்பா அமைச்சர்” எனப் பகல் கனவு காணும் திமுக ஆதரவாளர்களுக்கும், துரோகத்தின் உருவமான அதிமுக மாஜிக்கும் டாக்டர் திருப்பதியின் தவெக பிரவேசம் ஒரு சிம்மசொப்பனமாக மாறியிருக்கிறது.
வீழ்த்தப்படும் துரோகம்!
அரசியலில் ஒருவரை ஏமாற்றலாம், ஆனால் ஒட்டுமொத்த தொகுதியையும் ஏமாற்ற முடியாது. அதிமுக தலைமை செய்த அந்த வரலாற்றுப் பிழை, இன்று தவெக-வுக்குப் பெரும் பலமாக மாறியிருக்கிறது. நம்ப வைத்து ஏமாற்றியவர்களுக்குப் பாடமும், நம்பி வாய்ப்பளித்த விஜய்க்கு வெற்றியையும் பரிசாக அளிக்க திருப்பத்தூர் மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.
டாக்டர் திருப்பதி வெறும் வேட்பாளர் அல்ல; அவர் திருப்பத்தூர் மக்களின் மனச்சாட்சி. வரும் தேர்தலில் அவர் பெறும் ஒவ்வொரு வாக்கும், அரசியல் துரோகிகளுக்கு எதிராகப் பாயும் சாட்டை அடியாக அமையும். களப்பணிகள் ஜரூராகத் தொடங்கிவிட்டன'' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
