ஆரோக்கியம் முக்கியம் பாஸ்!! தண்ணீர் குடிக்க எந்த வாட்டர் பாட்டில் சிறந்தது?
ஆரோக்கியத்தை பாதிக்காத வாட்டர் பாட்டில்கள் எவை என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

Which is Best Water Bottle to Regular Use : ஆரோக்கியத்தை பேண உடலை நீரற்றமாக வைத்திருப்பது அவசியம். அதனால் தான் ஒவ்வொரு நாளும் உடல் எடைக்கு ஏற்றபடி தண்ணீரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். குறிப்பாக கோடைகாலத்தில் நீரிழப்பு ஏற்படுவதால் தண்ணீர் குடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி, மயக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வீட்டில் இருக்கும் போது பிரச்சனை இல்லை. அடிக்கடி தண்ணீர் குடிப்போம். ஆனால் வெளியே செல்லும்போது தண்ணீர் குடிக்க வாட்டர் பாட்டில்களை தான் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.
சிலர் பிளாஸ்டிக் பாட்டில்களை தான் எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்கின்றனர். சிலர் கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர். செம்பு, கண்ணாடி, சில்வர் என பாட்டில்களிலும் நிறைய வகைகள் உண்டு. இந்த பதிவில் எந்த வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் என காணலாம்.
ஸ்டீல் பாட்டில்:
துருப்பிடிக்காத ஸ்டீல் (எஃகு பாட்டில்) பாட்டில்கள் நீடித்த காலம் உழைக்கும். வெப்பத்துடன் வினைபுரியாதவை. BPA அல்லது phthalates ஆகிய வேதிபொருள்கள் இந்த பாட்டில்களில் காணப்படாது. இந்த பாட்டில்களில் எவ்வளவு சூடான தேநீர் அல்லது தண்ணீரை நிரப்பினாலும் வெப்பநிலையை தக்க வைத்திருக்கும். அவற்றுடன் வினைபுரியாது. இவற்றிலிருந்து எந்த நச்சுக்களும் வெளியாகாது உடலுக்கு சிறந்தது.
கண்ணாடி பாட்டில்:
கண்ணாடி பாட்டில்களில் எந்த நச்சுக்களும் இல்லை. ரசாயனங்கள் கிடையாது. பாட்டிலில் வெந்நீர் ஊற்றினாலும் பிரச்சனை இல்லை. உடையும் வரை மீண்டும் பயன்படுத்த முடியும்.
காப்பர் பாட்டில்:
காப்பர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது பாரம்பரியமானது. ஆனால் இதனை எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியாது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது என நம்பப்படுகிறது. ஆனால் இந்த பாட்டில்களில் தண்ணீர் வைத்தால் அவை வினைபுரியலாம். நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடாது. ஆக்சிஜனேற்றம் அடையக் கூடும். ஆகவே சுத்தம் செய்வது அவசியம். இரவில் தண்ணீர் ஊற்றி வைத்தால் காலையில் குடிக்லாம். நாள் முழுக்கக் குடிக்கக் கூடாது.
சிப்பர் பாட்டில் :
ஜிம் கொண்டு செல்ல வசதியானது. அடிக்கடி சுத்தம் செய்யவில்லை என்றால் பாக்டீரியாக்கள் பெருகும். வாய் வைத்து குடிக்கக் கூடிய சிப்பர் பகுதியை சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். இங்கு பாக்டீரியாக்கள் வரக் கூடும்.
பிளாஸ்டிக் பாட்டில்கள்:
பழைய பிஸ்லெரி அல்லது மினரல் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்துவது தவறு. இவை மைக்ரோபிளாஸ்டிக், சில இரசாயனங்களை தண்ணீரில் வெளியிடும் வாய்ப்புள்ளது. இவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியவை.
நீங்கள் வெறும் தண்ணீர் பாட்டில் தானே என நினைக்கலாம். ஆனால் அவற்றிலிருந்து வெளியேறும் ரசாயனங்கள் உடலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை. உடலுக்கு ஆரோக்கியத்தை விரும்பும்பட்சத்தில் கண்ணாடி பாட்டில் அல்லது ஸ்டீல் பாட்டில்கள் சிறந்த தீர்வாக இருக்கும்.