- Home
- Lifestyle
- Water Tank: ரயிலில் வாட்டர் டேங்க் எங்க இருக்கு? கூரையில இல்ல.. அப்புறம் எப்படி குழாயில தண்ணி கொட்டுது?
Water Tank: ரயிலில் வாட்டர் டேங்க் எங்க இருக்கு? கூரையில இல்ல.. அப்புறம் எப்படி குழாயில தண்ணி கொட்டுது?
Water Tank: ரயிலில் இவ்வளவு தண்ணீர் இருக்கே, வாட்டர் டேங்க் எங்கு உள்ளது என யோசித்து இருக்கீங்களா? ரயிலில் வாட்டர் டேங்க் எங்கு உள்ளது? அது அப்படி குழாய்களுக்கு தண்ணீர் அனுப்புகிறது? என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரயிலில் தண்ணீர் டேங்க் எங்கே இருக்கு?
இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். நாட்டில் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. நீண்ட தூரப் பயணத்தின் போது ரயில் கழிப்பறைகளிலும் வாஷ்பேசின்களிலும் வரும் தண்ணீரைப் பயன்படுத்தும்போது "ரயிலில் இவ்வளவு தண்ணீரும் எங்கே சேமித்து வைக்கப்படுகிறது?" என்று எப்போதாவது யோசித்து இருக்கீங்களா?
ரயிலின் அடிப்பகுதியில் தண்ணீர் டேங்க்
பெரும்பாலான பயணிகள் வீடுகளைப் போல ரயிலின் கூரையில்தான் பெரிய தண்ணீர் டேங்க் இருக்கும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைத்தது போல் பழைய ரயில்களில் தண்ணீர் டேங்க் கூரையின் மேல் தான் இருந்தது.
ஆனால் இப்போது நவீன இந்திய ரயில்களான ICF மற்றும் எல்.எச்.பி (LHB) பெட்டிகளில், தண்ணீர் டேங்க்கள் கூரையில் இல்லை; மாறாக, பயணிகள் அமரும் தளத்திற்கு கீழே, அதாவது ரயிலின் அடிப் பகுதியில் (Underframe) பொருத்தப்பட்டுள்ளன. துருப்பிடிக்காத எஃகினால் செய்யப்பட்ட உருளை வடிவ பெரிய டேங்க்கள் பெட்டியின் அடியில் பாதுகாப்பாக பிணைக்கப்பட்டுள்ளது.
1,800 லிட்டர் கொள்ளளவு தண்ணீர்
ஒரு சாதாரண ரயிலின் ஒவ்வொரு பெட்டியின் அடியிலும் தலா 450 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 தண்ணீர் டேங்க்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் ஒரு பெட்டிக்கு மொத்தம் 1,800 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. முக்கிய ரயில் நிலையங்களில் 'குவிக் வாட்டரிங் சிஸ்டம்' மூலம் வெறும் 10 நிமிடங்களில் இந்த டேங்க்கள் முழுமையாக நிரப்பப்படுகின்றன.
தண்ணீர் மேலே வருவது எப்படி?
ரயில் பெட்டிக்கு அடியில் இருக்கும் தண்ணீர் எவ்வாறு மேலே உள்ள குழாய்களுக்கு வருகிறது என்பதில் தான் ரயில்வேயின் நுட்பமான தொழில்நுட்பம் உள்ளது. அதாவது 'ஹைட்ரோ-நியூமேடிக் பிரஷர் பம்ப்' மற்றும் 'ஏர் அசிஸ்டட் அமைப்புகள்' மூலம் தான் அடியில் இருக்கும் தண்ணீர் அழுத்தம் கொடுக்கப்பட்டு மேலே கொண்டு வரப்படுகிறது. ரயிலின் பிரேக் அமைப்பிற்கு பயன்படுத்தப்படும் அதே காற்று அழுத்தத்தில் ஒரு பகுதி, இந்தத் தண்ணீர் அமைப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ரயிலின் அடிப் பகுதியில் உள்ள நீர் டேங்க்குகளுக்குள் இந்த ஏர் பிரஷர் அழுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் விசை, தண்ணீரை மேல்நோக்கித் தள்ளி, பயணிகள் பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகள் மற்றும் வாஷ்பேசின் குழாய்களுக்குச் சீரான வேகத்தில் கொண்டு சேர்க்கிறது. மோட்டார்கள் எதுவும் இல்லாமல், ரயிலின் சொந்த காற்று அழுத்த அமைப்பை மட்டுமே பயன்படுத்தி, ரயில் நகர்ந்தாலும் நின்றாலும் தடையின்றித் தண்ணீர் வரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூரையில் இருந்த தண்ணீர் அடிப்பகுதிக்கு சென்றது ஏன்?
பழைய காலத்தில் தண்ணீர் டேங்க்கள் ரயிலின் கூரையில்தான் பொருத்தப்பட்டிருந்தன. கூரை அமைப்பில் சில முக்கியமான நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், ரயில்வே நிர்வாகம் தண்ணீரை பெட்டியின் அடியில் மாற்றியது.
கூரையின் மீது அதிக எடையை ஏற்ற முடியாது என்பதால், குறைவான தண்ணீர் (சுமார் 900 முதல் 1,000 லிட்டர் வரை மட்டுமே) சேமிக்க முடிந்தது. இதனால் நீண்ட தூரப் பயணங்களில் தண்ணீர் சீக்கிரமாகத் தீர்ந்துபோனது. தற்போது அடியில் வைப்பதன் மூலம் 1,800 லிட்டர் வரை சேமிக்க முடிகிறது.
இது தவிர ரயில்கள் மணிக்கு 110 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் செல்லத் தொடங்கியபோது, கூரையில் அதிக எடை இருப்பது ரயிலின் மேல் பகுதி எடையை அதிகரித்து அதிர்வுகளையும் நிலைத்தன்மையற்ற தன்மையையும் உருவாக்கியது. இதனால் பாதுகாப்பு கருதியும் தண்ணீர் டேங்குகள் கீழே அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

