- Home
- Lifestyle
- வெறும் ரூ.1,000-ல் ஊட்டியை சுற்றிப் பார்க்கலாம்.! தமிழக அரசின் புதிய சுற்றுலாத் திட்டம்.! முழு விவரம் இதோ.!
வெறும் ரூ.1,000-ல் ஊட்டியை சுற்றிப் பார்க்கலாம்.! தமிழக அரசின் புதிய சுற்றுலாத் திட்டம்.! முழு விவரம் இதோ.!
Ooty One Day Trip for Rs.1,000/- by TTDC : தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் கோடை விடுமுறையை முன்னிட்டு ரூ.1,000 விலையில் ஊட்டியை சுற்றிப் பார்க்கும், சூப்பரான ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முழு விவரங்கள் குறித்து காணலாம்.

Ooty One Day Trip for Rs.1,000/- by TTDC
தமிழகத்தில் கோடை மாதம் தொடங்கி விட்டாலே மலைப் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானலில் கூட்டம் குவியத் தொடங்கிவிடும். இந்த நிலையில் மலைகளின் அரசியான ஊட்டியை இதுவரை கண்டிராத வகையில் வெறும் ரூ.1000-ல் சுற்றிப் பார்க்கும் சூப்பரான ஒரு நாள் திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு நாள் சுற்றுலா காலை 9:00 மணிக்குத் தொடங்கி, மாலை 5:00 மணி வரை நடைபெறும். 7 மணி நேர பயணத்தில் பல முக்கிய இடங்களை காணும் வாய்ப்பை இந்த திட்டம் வழங்குகிறது.
சுற்றிப் பார்க்கும் இடங்கள்
ஊட்டியில் மிகவும் பிரபலமான 55 ஏக்கர் அளவிலான அரசு தாவரவியல் பூங்கா, நீலகிரியின் மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா சிகரம், தேயிலை பறிக்கும் அழகு மற்றும் தேயிலையை பதப்படுத்தும் முறைகளை விளக்கும் தேயிலை தோட்டங்கள், ஊட்டியின் ஸ்பெஷல் ஹோம் மேட் சாக்லேட்டுகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை அறிய சாக்லேட் தொழிற்சாலை, அமைதியான சூழலில் படகு சவாரி செய்யும் படகு இல்லம், கர்நாடகா பூங்கா என சுற்றி பார்க்கும் பட்டியல் நீள்கிறது.
கட்டண விவரங்கள் மற்றும் வசதிகள்
இந்த ஒரு நாள் சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயணிகளுக்கு ஏற்ப மதிய சைவ உணவு மற்றும் தேநீர் வழங்கப்படுகிறது. ஊட்டியில் உள்ள சாரிங் கிராஸ் பகுதியில் அமைந்திருக்கும் ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து சுற்றுலா பேருந்து புறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் விஐபி பாஸ் வசதி மூலம் சுற்றுலா தளங்களுக்கு நேரடி நுழைவு இசைவு வழங்கப்படுகிறது. மேலும் 100 சதவீதமான சைவ உணவும் பயணத்தில் கிடைக்கிறது.
முன்பதிவு செய்வது எப்படி?
இந்த சுற்றுலாவிற்கு முன் பதிவு செய்ய அல்லது கூடுதல் தகவல்களை தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். +91 9176995854, +91 8148875747, அல்லது +91 9176995851 என்ற எண்களை அழைக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.ttdconline.com/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
முக்கிய அறிவிப்பு
வானிலை நிலவரம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் ஊட்டியை ரசிக்க திட்டமிடுபவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப் பிரசாதம் ஆகும். கோடை விடுமுறையில் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் குறைந்த பட்ஜெட்டில் ஊட்டியை சுற்றிப் பார்க்க விரும்புபவர்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

