Muthulakshmi: தமிழக்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி- இவரை பற்றிய சில வியக்க வைக்கும் உண்மைகள்
Muthulakshmi Reddy: தேவதாசி முறையை ஒழிக்கப் பெரும்பாடு பட்டவரும், அன்றைய மதராஸ் சட்ட மேலவையின் முதல் பெண் உறுப்பினருமான மருத்துவர். முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் நினைவு நாள் இன்று. இந்த பதிவில் அவரை பற்றிய சில வியக்கவைக்கும் உண்மைகளை தெரிந்து கொள்வோம்.
Muthulakshmi Reddy
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல்வேறு துறைகளில் சாதித்து வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்தவர் . தமிழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி, மதராஸ் சட்ட மேலவையின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமைகளுக்குரியவர்.
சென்னையில் இன்றைக்கும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அடையாறு புற்றுநோய் மையத்தையும் 1954ல் தொடங்கி மக்களுக்காகவே வாழ்ந்த அவரது வரலாறு போற்றுதலுக்குரியது. கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்.
Muthulakshmi Reddy
பள்ளி படிப்பு மாற்றம் கல்லூரி:
1886 ஜூலை 30ஆம் தேதி பிறந்த முத்துலட்சுமியின், தந்தை நாராயணசாமி, தாயார் சந்திரம்மாள் ஆவார். சிறுவயதில் இருந்தே கல்வியில் அதிக ஆர்வம் கொண்ட முத்துலட்சுமி1902இல் மெட்ரிகுலேசன் தேர்வில் முதல் மாணவியாக வந்தார் .தொடர்ந்து, உயர்நிலைப் பள்ளி படிப்பை புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் உதவித் தொகையுடன் படித்து முடித்தார். அந்த காலக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தில் முத்துலட்சுமி மட்டும்தான் ஒரேயொரு மாணவி ஆவார்.
புதுக்கோட்டை மன்னர்தான் உதவியுடன் சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறையில், முத்துலட்சுமி சேர்ந்தார். கல்லூரி படிப்பின் போது பார்வைக் குறைபாடு ஏற்பட்டுக் கண்ணாடி அணிந்து கொண்டே படித்து முடித்தார். இருப்பினும், அறுவை சிகிச்சைப் பிரிவின் தேர்விலும் முதல் மாணவியாக வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
Muthulakshmi Reddy
அன்னிபெசன்ட் அம்மையார்:
மருத்துவ துறையில் மட்டுமின்றி முத்துலட்சுமி ரெட்டி, அன்னிபெசன்ட் அம்மையாரின் வழிகாட்டுதலின் கீழ் பெண்களுக்கான மீட்சி இயக்கங்களில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார். 1914இல் அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்மஞான சபை வழக்கப்படி, நிபந்தனைகளுடன் எளிய முறையில் சுந்தரரெட்டி என்பவரை முத்துலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.
உலக பெண்கள் மாநாடு:
1925இல் கணவர் சுந்தரரெட்டி மற்றும் குழந்தைகளுடன் மேல் படிப்புக்காக லண்டன் சென்றார் முத்துலட்சுமி. அங்கிருந்தபடியே, இந்திய மகளிர் சங்கத்தின் சார்பில் 1926ல் பாரிஸில் நடைபெற்ற அகில உலக பெண்கள் மாநாட்டில் பங்கேற்றார். அம்மாநாட்டில் முத்துலட்சுமி, இளவயது திருமணம், விதவை மறுமணம் போன்றவை குறித்து எடுத்துரைத்தார். 1926-30 காலத்தில் அவர் கவுன்சில் உறுப்பினராக பணியாற்றினார்.
Muthulakshmi Reddy
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்:
முதல் பெண்கள் இயக்கமான 'இந்திய மாதர் சங்கத்தை' தொடங்கி பெண்களை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றார். முத்துலட்சுமி அம்மையாரின் முயற்சியில்தான் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை இந்து கோவில்களுக்கு அர்ப்பணிக்கக் கூடிய தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், விபசார ஒழிப்புச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
பெண் விடுதலைக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் போராடிய இவருக்கு 1956ல் அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. மருத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தங்களில் சிறந்த பங்காற்றிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1968-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி தனது 82-வது வயதில் உயிரிழந்தார்.