- Home
- Lifestyle
- புரட்டாசி பிறந்திருச்சு... நான்-வெஜ் ஏக்கம் தீர்க்கும் 'சைவ மீன் குழம்பு'.. அச்சு அசல் அதே டேஸ்ட்!
புரட்டாசி பிறந்திருச்சு... நான்-வெஜ் ஏக்கம் தீர்க்கும் 'சைவ மீன் குழம்பு'.. அச்சு அசல் அதே டேஸ்ட்!
பெருமாளுக்கு உகந்த புரட்டாசிமாதத்தில் விரதத்தைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், அசைவ மீன் குழம்பின் ருசியை மிஸ் செய்யாமல் இருக்க சூப்பர் தீர்வுதான் ‘சைவ மீன் குழம்பு’. வாழைக்காயை வைத்து அச்சு அசல் மீன் சுவையிலேயே இதை மிக எளிதாகச் செய்துவிடலாம்.

நான்-வெஜ் ஏக்கம் தீர்க்கும் ‘சைவ மீன் குழம்பு’
புரட்டாசி மாதம் பிறந்துவிட்டாலே அசைவப் பிரியர்களின் வீடுகளில் ஒருவித அமைதி சூழ்ந்து விடும். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்ததும் மூக்கை துளைக்கும் மட்டன் சுக்காவின் வாசமும், சமையலறையில் கொதிக்கும் மீன் குழம்பின் நறுமணமும் ஒருமாத காலத்திற்கு டாடா காட்டி விடும். பெருமாளுக்கு உகந்த இந்த மாதத்தில் விரதம் இருப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்றாலும், நாக்கின் சுவை நரம்புகள் வார இறுதி நாட்களில் அசைவத்தை தேடி ஏங்குவது இயல்புதான்.
அப்படி ஏங்கும் அசைவப் பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவதுதான் "சைவ மீன் குழம்பு". வாழைக்காய் அல்லது சோயா சங்க்ஸ் (Meal Maker) கொண்டு செய்யப்படும் இந்தக் குழம்பு, பார்ப்பதற்கும் சாப்பிடுவதற்கும் அச்சு அசல் மீன் குழம்பு சுவையிலேயே இருக்கும்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய்: 2 (மீன் துண்டு வடிவில் வெட்டியது)
சின்ன வெங்காயம்: 15 (பொடியாக நறுக்கியது)
தக்காளி: 2
பூண்டு: 10 பற்கள்
புளி: எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்)
குழம்பு மிளகாய்த்தூள்: 2 தேக்கரண்டி
மல்லித்தூள்: 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்: 1/2 தேக்கரண்டி
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை
வறுக்க மசாலா: மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சோள மாவு (Corn flour) சிறிதளவு
செய்முறை - 1
வாழைக்காயின் தோலை மெலிதாகச் சீவி, மீன் துண்டுகள் போல சாய்வாக வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும். நடுவில் சிறிய துளையிட்டால் அசல் மீன் துண்டு போலவே காட்சியளிக்கும்.
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சோள மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பேஸ்ட் போல பிசையவும். இதில் நறுக்கிய வாழைக்காய் துண்டுகளைத் தடவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். தோசைக்கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த வாழைக்காய் துண்டுகளை இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
மண் சட்டி அல்லது கடாயில் தாராளமாக நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கிய பின், குழம்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
செய்முறை - 2
கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குழம்பை நன்றாகக் கொதிக்கவிடவும். குழம்பு எண்ணெய் பிரிந்து திக்காக வரும்போது, நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள வாழைக்காய் மீன் துண்டுகளை மெதுவாகச் சேர்க்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டால், மசாலாவின் சாறு வாழைக்காயில் முழுமையாக இறங்கிவிடும். மேலே சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் நாவில் எச்சில் ஊறவைக்கும் "சைவ மீன் குழம்பு" தயார்.
சுடச்சுட சாதத்தில் இந்த மீன் குழம்பை ஊற்றி, அந்த வாழைக்காய் துண்டை தொட்டு சாப்பிட்டால், அசைவ மீன் குழம்பை விட ஒரு படி மேலான சுவையைத் தரும். புரட்டாசி விரதத்தை ருசியாகவும் சுவாரசியமாகவும் மாற்ற இந்த வாரமே இதை முயற்சித்துப் பாருங்கள்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

