மாணவர்களிடையே உருவாகும் தற்கொலை எண்ணம்.. தடுக்க பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள்!!
Parenting Tips : மாணவர்களிடையே எழும் தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி? பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம்.

மாணவர்களிடையே உருவாகும் தற்கொலை எண்ணம்.. தடுக்க பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள்!!
நமது நாட்டின் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் 2022 ஆம் ஆண்டு வெளிவந்ததன் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் படி 2022இல் நம் நாட்டில் 13 ஆயிரத்து 444 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட 1416 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த நிலைமைக்கு பொதுவான காரணமாக கல்வியும் கல்வி சார்ந்த பெற்றோரின் அழுத்தமும் இருக்கிறது.
மாணவர்களிடையே எழும் தற்கொலை எண்ணங்கள்
தமிழ்நாட்டில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. பெற்றோர் திட்டுவதால், அடிப்பதால், கண்டிப்பதால் குழந்தைகள் மனமுடைந்து தவறான முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். பொதுத்தேர்வுகள், மருத்துவ படிப்பு, பொறியியல் கல்லூரி தேர்வு, நீட் தேர்வு என தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் இப்படியான துர்சம்பவங்கள் நிகழத் தான் செய்கின்றன. மதிப்பெண்களுக்கான அழுத்தம், உருவக் கேலி, உறவு பிரச்சனைகள் போன்றவற்றால் ஏற்படும் அழுத்தமும் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. இப்படியான சூழலில் குழந்தைகளை பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனப்பாங்குடன் எப்படி தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது என இந்தப் பதிவில் காணலாம்.
மாணவர்களின் மனநிலை:
உங்களுடைய குழந்தைகள் வீட்டில் இருப்பது போலவே வெளியில் இருப்பார்கள் என சொல்லிவிட முடியாது. பள்ளியில், கல்லூரியில் அவர்கள் தனிப்பட்ட முறையில் காயப்படலாம். தேர்வு அழுத்தத்தால் வேதனைகள் இருக்கலாம். நண்பர்கள் உருவக் கேலி செய்வதால் மனம் நொந்து இருக்கலாம். தன்னுடைய பொருளாதார நிலை காரணமாக நண்பர்கள் முன் தாழ்வு மனப்பான்மை கொண்டு வருத்தப்பட்டு இருக்கலாம். இப்படி, அவர்களுடைய மனநிலை வெவ்வேறு வகையில் புற காரணிகளால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இதை பெற்றோர் புரிந்து கொள்வது அவசியம். "எல்லோரும் படிக்கும் படிப்பை தான் நீயும் படிக்க வேண்டும்" என பெற்றோர் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பது அவர்களை எதிர்காலத்திலும் வருத்தப்பட வைக்கும் செயலாகும். அவர்களிடன் விருப்பதை கேட்க வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். குழந்தைகளின் விருப்பத்தை அறியாமல் படிப்பு, உடை என அனைத்திலும் பெற்றோர் தலையிடக்கூடாது.
இதையும் படிங்க: உங்க குழந்தைக்கு படிப்பு மேல ஆர்வம் வரனுமா? சூப்பரான '5' டிப்ஸ்!
தேர்வு அழுத்தம்:
அதிக மதிப்பெண்கள் வராவிட்டால் தன்னுடைய பெற்றோர் கண்டிப்பாக நடந்து கொள்வார்கள் என குழந்தைகள் அஞ்சும் நிலைக்கு அவர்களை தள்ளாதீர்கள். படிப்பு அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தாமல் தன்னம்பிக்கையை ஊட்டும் விஷயமாக மாற பெற்றோராக ஆதரவாக இருக்க வேண்டும். ஒரு பள்ளிக் குழந்தை தன்னுடைய 13 வயதிலேயே தேர்வு அழுத்தத்தை அதிகமாக சந்திக்க நேரிடுகிறது. மதிப்பெண்கள் எடுக்காவிட்டால் திட்டும் பெற்றோர் ஒரு புறமிருக்க பெற்றோரை நல்ல மதிப்பெண்கள் எடுக்காமல் ஏமாற்றி விடக்கூடாது என பதறும் குழந்தைகள் இன்னொரு புறம் இருக்கின்றனர். இப்படி தேர்வுகள் குறித்து பதற்றத்திலேயே தங்களுடைய மாணவப் பருவத்தில் பெரும்பாலான குழந்தைகள் கடக்கின்றனர். இதுதான் அவர்களை தற்கொலைக்கு இட்டு செல்கின்றது.
இதையும் படிங்க: படிக்கும்போது குழந்தைகளின் கவனம் சிதறுதா? இப்படி பண்ணா சூப்பரா படிப்பாங்க!
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் தங்களிடம் மனம் திறந்து பேசுவதற்கான சூழலை பெற்றோர் அவர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். பள்ளி அல்லது கல்லூரி முடிந்து தன்னிடம் வந்து அன்றைய நாள் குறித்து எந்த பயமும் பதட்டமும் இன்றி பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உறவும் இருக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையை பெற்றோர் அளிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களை வைத்து அவர்களை குத்தி காட்டாதீர்கள். இது உங்கள் மீதான நம்பிக்கையை குறைக்கும். குழந்தைகள் சொல்வதைக் காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டுங்கள். தேர்வில் மதிப்பெண் குறையும்போது அவர்கள் சோர்ந்து போனால் அவர்களுக்கு உறுதுணையாக நீங்கள் இருப்பதாக நம்பிக்கை ஊட்டுங்கள். ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்தாலும் நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள். நிச்சயம் எந்தப் பிரச்சனையானாலும் உங்களிடம் வருவார்கள். மரணத்தை நாடமாட்டார்கள்.